ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தினம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதனை முன்னிட்டு சர்வமத தலைவர்கள் அவருக்கு தனது ஆசிகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நாடு இன்று எதிர் நோக்கியுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டையும், நாட்டு மக்களையும் சரியான முறையில் வழிநடத்திச் செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்நாட்டில் வாழுகின்ற சகல இன, மத, மொழி மக்களையும் சமமாக கருதி சிறப்பாக ஆட்சி செய்து வரும் ஒரு உன்னத தலைவராக நாம் அவரை காண்கின்றோம்.
முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இணைந்து நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வு காணும் வகையில் சகல பிரச்சினைகளையும் துச்சமென கையாண்டு வெற்றி கண்டுவரும் மாபெரும் தலைவர்களை நாம் இன்று காண்கிறோம். இவர்கள் இருவரும் தான் நாட்டில் பயங்கரவாதம் நிலவிய காலத்தில் அதற்கு முகம் கொடுத்து அதனை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு வந்து இன்று நாட்டு மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்தினார்கள் என்பதை நாங்கள் பெருமையுடன் நினைவுகூர வேண்டும்.
அதேபோல் நாட்டில் சுனாமி ஏற்பட்ட போது அதிலிருந்து நாட்டு மக்களை மீட்டு இயல்பு வாழ்க்கைக்கு திருப்பிய பெருமையும் இவர்கள் இருவரையுமே சாரும். அதேபோன்று இன்று நாடு கொரோனா வைரஸ் அச்சத்தில் இருக்கின்ற போது அதனை சரியான முறையில் கையாண்டு அந்த பாதிப்பில் இருந்து மக்களை விரைவாக மீட்டெடுப்பர். அந்த நம்பிக்கை எமக்கு உள்ளது எனவும் சர்வமத தலைவர்கள் தமது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்கள்.
புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி அங்ரஹாரே கஸ்ஸப நாயக தேரர், இந்து சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி பாபுஷர்மா ராமச்சந்திர குருக்கள், முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி ஹஸன் மௌலானா, கிறிஸ்துவ சமய விவகாரங்களுக்கு இணைப்பாளர் அருட்தந்தை கலாநிதி சிக்ஸ்டன்ஸ் குருகுலசூரிய பாதிரியார் ஆகிய சர்வமத தலைவர்களே இவ்வாறு ஜனாதிபதிக்கு ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.