நாட்டில் பயணக் கட்டுப்பாடு நாளை (21) தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் செயற்பட வேண்டிய முறை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய, வீடொன்றிலிருந்து இருவருக்கு மாத்திரமே வெளியேற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது மற்றும் வாடகை வாகனங்களில் இருவருக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேவையான உத்தியோகத்தர்களை மாத்திரம் கடமையில் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிற்சி பட்டறை, கூட்டங்கள் ஆகியனவற்றிற்கு தேவையேற்படின் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், திருமண பதிவுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை நிலையங்களில் அமர்ந்து மது அருந்துதல் மற்றும் களியாட்ட விடுதிகளில் மது அருந்துதலுக்கு தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் அடகு விற்பனை நிலையங்கள் நாளை திறக்கப்படும் என்பதோடு, 10 வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் சேவையை வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிகையலங்கார நிலையங்களில் ஒரே நேரத்தில் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் நாளை திறக்கப்படும் என்பதோடு 3 வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் ஒரே நேரத்தில் சேவை வழங்கப்பட வேண்டும் ஆகிய விதிமுறைகள் உள்ளிட்ட 46 விதிமுறைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விதிமுறைகள் அடங்கிய கோவை எதிர்வரும் ஜுலை மாதம் ஐந்தாம் திகதி வரை நடைமுறையில் காணப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.