அறிமுகம்:
சமீபகாலமாக நுாற்றுக்கணக்கான கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவது பல்வேறு தரப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக இருந்து வருகின்றது. இவ்வாறு இந்த உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நோய்த் தொற்று, காலநிலை மாற்றம், பிழையான அல்லது சட்டவிரோதமான மீன்பிடிமுறைகள் (டைனமைட், சயனைட் மீன்பிடி முறைகள்), இயந்திரப் படகுகள், கப்பல்களிலிருந்து தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ அல்லது நோக்கமாகவோ கொட்டிவிடப்படும் இரசானப்பொருட்கள், விபத்துக்கள், கடலின் அடித்தளத்தில் புதைக்கப்படும் இரசாயன அணுக்கழிவுகள், இரசாயனக் கழிவுகள், ஆயுதங்களை பாவித்தல் அல்லது ஆயுதங்களைப் பரீட்சித்துப் பார்த்தல் போன்றவைகளை, பல காரணங்களில் சில காரணங்களாக கூறலாம்.
இவைகளுக்கு எவை சமீபகால கடல்உயிரிகளின் இறப்புகளுக்கு காரணங்களாக இருக்கலாம்?
1) நோய்கள் காரணங்களாக இருந்தால், அவைகளுக்குரிய அறிகுறிகள் இறந்து கரையொதுங்கிய உயிரினங்களில் காணப்பட்டிருக்க வேண்டும்.
2) காலநிலை மாற்றம் காரணம் என்றால், சமுத்திரங்களின் மேற்பரப்பு நீரோட்டம், கீழிருந்து மேலான நீரோட்டம், வெப்பநிலை, காற்றின் வேகம், புவியீர்ப்புவிசை, உவர்த்தன்மை, கரையக்கூடிய ஒட்சிசன் அளவு, அலையுயிரிகளின் அடர்த்தி, கடல் உயிரிகள் வாழும் பகுதிகள் (மேற்பகுதி, நடுப்பகுதி, மேற்பகுதி), பிரதிநிதி உயிரினங்கள் (indicator species) போன்றவைகளில் மாற்றங்கள் காணப்பட்டிருக்க வேண்டும். அவைகளை நேர்மையான நடுநிலையான, நிபுணர்களும், ஆய்வாளர்களும் (நிறையப்பேர் இருக்கிறார்கள்) அறிவித்திருக்க வேண்டும்.
3) நீலப்பச்சை அல்கா நஞ்சாதல், பிழையான மீன்பிடி முறைகள், கடல்நீர் வெப்பநிலை திடிரென அதிகரித்தல், குறைதல் போன்றவைகள் காரணங்களாக இருந்தால், அவையும், இறந்தொதுங்கிய உயிரிகளில் காணப்பட்டிருக்க வேண்டும். காணப்பட்டால் அறிவித்திருக்க வேண்டும்.
4) நிலக்கீழ் ஆயுதப் பாவனை அல்லது பரீட்சிப்பு நடந்திருக்க வாய்ப்பில்லை.
5) எது காரணம்? அல்லது எவை காரணங்கள்?
i) பொறுப்பு வாய்ந்த அமைச்சர், கடல் கொந்தழிப்பான காலங்களில் இதெல்லாம் ”சகஜம்” என்றும்,
ii) அதற்கடுத்த நிலையிலுள்ள நிறுவனத் தலைவர்கள், நீங்கள் நினைக்கும் காரணங்களுக்கு இன்னும் ஆதாரம் இல்லை. வேறு காரணங்களும் இருக்கலாம். இருந்தும் மாதிரிகள் அனுப்பியிருக்கிறோம். வரட்டும் பார்ப்போம் என்றும்,
iii) நடுநிலையான நேர்மையான அதிகாரிகளும், ஆய்வாளர்களும், இறந்த மீன்களின் சமிபாட்டுத் தொகுதிக்குள்ளும், பூப்பிளவுகளுக்குள்ளும், நுண்பிளாஸ்ரிக் பொருட்கள் காணப்படுகின்றன. இறந்த உயிரினங்களில் எரிகாயங்கள் காணப்படுகின்றன. ஆகவே ”நீங்கள் நினைக்கும் காரணங்கள்தான்” சரி என்றும்,
iv) சூழலியலாளர்களும், கல்வியலாளர்களும், ஊடகவியலாளர்களும் உண்மை என்றால் ஒன்றுதான். அந்த உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். நாற்பது வருடங்களில்கூட, இந்த கடற்சூழற்றொகுதிக்கு ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்யமுடியாது. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும்,
v) திருவாளர் மக்களோ, ஆமை இறந்தாலும் பிரச்சினையில்லை. டொல்பின் இறந்தாலும் பிரச்சினையில்லை. கடலில் பிளாஸ்ரிக் இருந்தாலும் பிரச்சினை இல்லை. கடலில் நஞ்சு இருந்தாலும் பிரச்சினை இல்லை. சாப்பாடு முக்கியம். மீன் சாப்பிடலாமா? இல்லையா? என்றும், வெவ்வேறான நிலைப்பாடுகளில் இருக்கிறார்கள்.
கடல் ஆமைகள்-
நுாற்றுக்கணக்கில் மீன்கள் தவிர்த்து, வேறு உயிரினங்கள் இறந்து கரையொதுங்கத் தொடங்கியுள்ளன. இவைகள் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? எல்லா உயிரினங்களையும் வைத்து விளக்கங்கொடுப்பதற்கான விரிவஞ்சி கடலாமைகளை உதாரணமாக எடுக்கின்றேன்.
உலகில் ஏழு கடலாமை இனங்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் அபாயத்தின் விழிம்பிலிருப்பவை. இலங்கையில் ஐந்து இனங்கள் காணப்படுகின்றன. கடலாமைகள் ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்கள் பிரயாணம் செய்யும். கடற்கரையில் மடுதோன்றும். நுாற்றுக்கணக்கான முட்டையிடும். சென்றுவிடும். பின்னர் முட்டைகள் தொண்ணுாறு குஞ்சுபொரிக்கும். தங்கள் பெற்றோரை தனியே தேடி சென்றடைந்துவிடும். இதற்கு அவைகளின் உடலில் கட்டமைக்கப்பட்டுள்ள ஜீபிஎஸ் நடற்றொழில்நுட்பம் பாவிக்கும். ஆயிரம் குஞ்சுகளில் ஒரு குஞ்சே, வேட்டையாடிகள், நீரோட்டம், காலநிலைக் காரணிகள் போன்றவைகளிலிருந்து தப்பித்து இவ்வாறு பெற்றோரிடம் சேர்ந்துவிடும்.
மையக்கல் இனங்கள் (Keystone Species):
சூழற்றொகுதியிலுள்ள இனம் ஒன்றை அகற்றும் போது, அது முழுச் சூழற்றொகுதியையும் பாதிக்கச் செய்யும். இவ்வாறான இனங்கள் மையக்கல் இனங்களாகும். உதாரணம் - ஆல மரங்களை அகற்றினால், பறவைகள் போன்ற பல்வேறு உயிரிகளின் பல்வகைமை குறையும். இதுபோல ஆழ்கடலில் சுறாக்களையும் குறிப்பிடலாம். யானை, கடல்நாய், கரடி, போன்ற உயிரிகளளை இதற்கு உதாணரங்களாக கூறலாம்.
கடலாமைகளானது மையக்கல் இனங்களாகும். இந்த இனங்கள் கடற்சூழற்றொகுதியின் நிலவுகைக்கும், ஆரோக்கியத்திற்கும், மற்றைய விலங்குகளின் இருக்கைகளுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. கடற்புற்களும், தாவரங்களும் அதீதமாக பெருகாமல் அவைகளை உணவாக உட்கொண்டு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. ஹொவ்க்பில் கடலாமைகள் வேகமாக வளருகின்ற முருகைக் கற்களையும், கடற்பஞ்சுகளையும் உணவாகக் கொள்வதனாலேயே, மெதுவாக வளர்கின்ற முருகைக்கற்பாறைகள் மேல் இவைகள் படர்ந்து மூடுவது தடுக்கப்பட்டு அவைகளை இறப்பிலிருந்து காப்பாற்றுகின்றன. அத்துடன், ஜெலிமீன்களின் பரவுகைகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன.
கடலாமைகளானது கடற்புற்களை தொடர்ச்சியாக உண்ணுவதன் காரணமாக, அவைகளின் வளர்ச்சிவீதம் கட்டுக்குள் வைக்கப்பட்டு, கடற்புற் சூழற்றொகுதியின் ஆரோக்கியமும், உற்பத்தித்திறனும் பேணப்பட உதவுகின்றன. இதன் காரணமாக போசணைப்பொருட்கள், கடலிலிருந்து போசணைப் பொருட்கள் குறைந்த கரைப்பகுதிக்கு செல்கின்றன. இது கரையோர உயிரினங்களின் தப்பிப் பிழைத்தலுக்கு மிக அவசியமாகும். கரையோரச் சூழற்றொகுதியின் கட்டுறுதிக்கும் அவசியமானதாகும். இந்த போசணைப் பொருட்களாலேயே, நெய்தல் வலய தாவரங்களும், மண்மேடு தாவரங்களும் வளர்கின்றன. ஆமைகள் அழியும் போது, இந்த தாவரங்களும் அழிந்து, மண்ணரிப்பு ஏற்பட்டு, கடல் இலகுவாக இந்தப் பகுதிகளை உள்வாங்கும்.
எனவே கடலாமை என்ற ஒரு உயிரியின் முக்கியத்துவம் எவ்வாறு முழுச் சூழற்றொகுதிக்கும் முக்கியம் என்பதை நீங்கள் உணர்வதைப்போலவே, மற்றைய உயிரிகளும் சூழற்றொகுதியின் நிலவுகைக்கு முக்கியம் என்பதை உணர வேண்டும்.
மீன்களை சாப்பிடலாமா?
கடல் மாசுபடும்போது, இரசாயனப் பொருட்களிலுள்ள பாரமான உலோகங்கள் கடலில் பரவும். இதனால் மீன்களின் உணர்திறன் பாதிக்கப்படும். உணவுகளை கண்டுபிடிப்பதிலும், வேட்டைவிலங்குகளை உணர்ந்து தப்பிப்பதிலும் சிக்கல்களையும் மீன்கள் எதிர்நோக்கும். மாசடைவதால், பரவிய நுண்ணிய பிளாஸ்ரிக் பொருட்கள், நஞ்சுப் பொருட்களை உறிஞ்சி வைத்திருக்கின்ற, பஞ்சு போன்றது. இவைகளை மீன்கள் சாப்பிடும். மீன்களை பறவைகளும், சீல்களும், மனிதர்களும் சாப்பிடுவார்கள். இதனால் நஞ்சுகள் எல்லோருக்கும் பரவும். நஞ்சு தீவிரமானால் உடனே உண்டவர்களை கொல்லும். அதுபோலவே கடற்தாவரங்களை இறக்கச் செய்யும். அதன் காரணமாக ஒளித்தொகுப்பு குறைந்து, ஒட்சிசன் குறைந்து கடல்உயிரிகள் இறக்கும். அத்துடன் தாவரவுண்ணிகள் உணவுப்பொருட்கள் சாப்பிடுவதற்கு கிடைக்காது, பட்டினியினாலும் இறக்கும். நுண்ணிய பிளாஸ்ரிக் பொருட்கள், உக்க முடியாததவை. அவைகளை உண்ணும் மீன்களின் உணவுத் தொகுதியில் இவை சமிபாடடையாது, பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி மீன்களை இறக்கச் செய்யும்.
மீன்களை உண்ணுதல் மீன்பிடியுடன் சம்பந்தப்பட்டது. கடல் மீன் பிடி என்பது 350000 மீனவர்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட சீவனோபாய முறை. வருமானத்தை பெற்றுத் தரும் முறை. அத்துடன் இலங்கையின் புரதத்தை பூர்த்தி செய்வதில் முக்கியமானது. உணவுப் பாதுகாப்புக்கும் மிக முக்கிய பங்காற்றுவது. எனவே மீன்களை உண்ணலாமா? உண்ணக்கூடாதா,? என்பதை ஆய்வுகளும், அறிக்கைகளும் ஊடாகவே அரசாங்கம் அறிவிக்க வேண்டும். அதுதான் தற்போதைய நிலையில் மிக உசிதமானதும் கூட.
ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்)
சிரேஸ்ட விரிவுரையாளர்,
தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
செய்தியாக்கம் : நூருல் ஹுதா உமர்