நேற்றைய தினம் இணையம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய நிதியமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் அதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
நடமாட்டக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை என்பன அதிகரித்துள்ளது. எனவே, சட்டரீதியாக மதுபான விற்பனையை இணையத்தளம் வழியாக மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மதுவரித்திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியது.
எனினும், நாட்டின் கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு, கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்திடமும் இதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது என அச்செயற்பாட்டு மையத்தின் பிரதானி அறிவித்துள்ளார்.
இதேவேளை, இணையவழி மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்குவதற்கு எதிராக மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.