கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் கடல் நீருக்கு பல்வேறு இரசாயன பொருட்கள் சேர்வதன் விளைவாக இலங்கையின் உப்பு உற்பத்திக்கு எவ்விதத் தடையும் ஏற்படமாட்டாது.
நாட்டில் ஒருபோதும் உப்பு தட்டுப்பாடொன்று ஏற்படமாட்டாது என்பதற்கு உத்தரவாதமளிக்க முடியும் என ஹம்பந்தோட்டை இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி நிஷாந்த் சந்தபரண தெரிவித்துள்ளார்.
இதன் விளைவால், நாட்டின் உப்பு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் பரவியதால் வாடிக்கையாளர்கள் கடைகளிலிருந்து அதிகளவான உப்பைக் கொள்வனவு செய்து சேமித்து வைக்கின்றனர்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
"கடல் நீரில் எதைச் சேர்த்தாலும் அது உப்பு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தாது. உப்பு உற்பத்திக்கு சோடியம் குளோரைட் மட்டுமே தேவைப்படுகிறது. ஏனைய அனைத்து இரசாயனக் கூறுகளும் ஆவியாதல் மூலம் அகற்றப்படுகின்றன.
அதாவது, கப்பலில் தீப்பற்றியதன் விளைவாக கடல்நீரில் எந்த இரசாயனப் பொருள் சேர்க்கப்பட்டாலும், அதிக வெப்பத்தைப் பயன்படுத்தி உப்பு உற்பத்தியின் ஆவியாதல் மூலம் தேவையற்ற பொருட்கள் அனைத்தும் அகற்றப்படுகின்றன. மீதமுள்ள சோடியம் குளோரைட் மாத்திரம் உப்பு தயாரிக்க பயன்படுகிறது. மனித நுகர்வுக்கு பொருந்தாத எதுவும் இங்கு சேர்வதில்லை.
தற்போது கூட, கடல் நீரில் பலவிதமான இரசாயனங்கள் உள்ளன. இந்த கப்பல் மூலம் மட்டுமல்லாமல், பிற வழிகளிலும் கடல் நீரில் பல்வேறு பதார்த்தங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஆவியாதல் மூலம் பிரித்தெடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
எனவே, இது நாட்டில் உப்பு உற்பத்திக்கு ஒரு தடையாக இருக்காது. நாட்டின் தேவையில் 40 சதவீதம் ஹம்பந்தோட்டை உப்பு நிறுவனத்தால் வழங்கப்படுகின்றது. தற்போது எங்களிடம் 125,000 மெட்ரிக் டொன்களுக்கும் அதிகமான உப்பு வைப்பில் பாதுகாப்பாக உள்ளது. அத்துடன் மேலும் பல நிறுவனங்களினூடாக உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் உப்பின் விலை ஒருபோதும் உயராது.
எனவே இத்தருணத்தில் எவரும் பயப்பட வேண்டாம், உப்பு சேகரிக்க வேண்டாம் என்று நாம் மக்களை கேட்டுக் கொள்கின்றோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.