அஹ்னாப் ஜசீமின் சட்டத்தரணிகள் அவருக்குச் சார்பாக வாதங்களை முன்வைப்பதைத் தடுக்கும் நோக்கில், அவரது குடும்பத்தார் மற்றும் சட்டத்தரணிகளுக்கு அறிவிக்காமல் அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை விசனம் வெளியிட்டிருக்கிறது.
சர்வதேச மன்னிப்புச்சபை அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜசீம் என்பவர் எவ்வித குற்றச்சாட்டுக்களும் ஏற்றுக் கொள்ளத்தகுந்த ஆதாரங்களுமின்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 400 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.
அவரது உடல் நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் மிக மோசமாகவும் மனிதாபிமானமற்ற விதத்திலும் அஹ்னாப் ஜசீம் நடத்தப்பட்டிருக்கிறார். இக்காலப்பகுதியில் அவரை வற்புறுத்தி பொய்யான வாக்குமூலத்தைப் பெறுவதற்கும் அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.
அஹ்னாப் ஜசீம் கைது செய்யப்பட்டதிலிருந்து சுமார் 10 மாதங்கள் வரையில் சட்ட உதவியை நாடுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன் பின்னர் சட்ட உதவியைப் பெறுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட போதிலும் அவருக்கும் அவரது சட்டத்தரணிக்கும் இடையிலான கலந்துரையாடல் அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டது. அது மாத்திரமன்றி அஹ்னாப் ஜசீமின் குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் அவரை உரிய தினங்களில் அணுகுவதற்கும் தடையேற்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அஹ்னாப் ஜசீமின் சட்டத்தரணிகள் அவருக்குச் சார்பாக வாதங்களை முன்வைப்பதைத் தடுக்கும் நோக்கில், அவரது குடும்பத்தார் மற்றும் சட்டத்தரணிகளுக்கு அறிவிக்காமல், அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்று அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-நா.தனுஜா