இந்தியாவின் மிஸோராம் மாநிலத்தின் பக்தவங்க் டிலாங்நுயம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜியான சனா. இவருக்கு 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரக் குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணிப்பது கடினம் என்று கூறப்படுகிறது. பக்தவங்க் என்ற கிராமத்தில் நூறு அறைகள் கொண்ட நான்கு மாடி வீட்டில் அவர்கள் அனைவரும் வசித்து வந்தனர். இந்த வீடு அந்தப் பகுதியின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஜியான, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நிலை மோசமானது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அவரின் மரணத்திற்கு, மிஸோராம் மாநில முதலமைச்சர் உட்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலகத்தின் மெகா குடும்பத்து தலைவர் என அழைக்கப்பட்ட மிஸோராமை சேர்ந்த ஜியான சனா மரணிக்கும் போது அவருக்கு வயது 76 என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)