மொடல் அழகி பியூமி ஹன்சமாலி, அழகுக் கலை நிபுணர் சந்திமல் ஜயசிங்க ஆகியோர், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று (31) கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற பிறந்த நாள் களியாட்ட நிகழ்வை மையப்படுத்தி இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மொடல் அழகி பியூமி ஹன்சமாலியும், அழகுக் கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவும் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது அவர்களை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான், இது குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, நேற்று (30) இரவு, கொழும்பு – கோட்டையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிறந்த நாள் களியாட்ட நிக்ழவொன்று இடம்பெற்றுள்ளதாக கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
நாட்டில் நிலவும் தொற்று நோய் பரவல் சூழ் நிலையில், அனைத்து களியாட்ட நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளதன் பின்னனியிலும் தனிமைப்படுத்தல், பயணத் தடை விதிமுறைகள் அமுலில் உள்ள நிலையிலும் இந்த பிறந்த நாள் களியாட்ட நிகழ்வு தொடர்பில் உடன் விசாரணைகளை நடத்த கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகர கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இந்த பிறந்த நாள் களியாட்டத்தில் 20 முதல் 25 பேர் வரை பங்கேற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. அவர்களில் 12 பேரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்ட பியூமி ஹன்சமாலி, சத்திமல் ஜயசிங்கவை கைது செய்தனர்.
ஏனையோரைக் கைது செய்யவும், அடையாளம் காணப்படாதவர்களை அடையாளம் காண ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சிசிரிவி. காட்சிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகலையும் கோட்டை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையிலேயே கைது செய்யப்பட்ட மொடல் அழகி பியூமி ஹன்சமாலி, அழகுக் கலை நிபுணர் சந்திமல் ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக கடந்த 2020 ஒக்டோபர் 15 ஆம் திகதி சுகாதார அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் 98 ஆவது பிரிவுடனும், 2021 மே 12 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட கொவிட் 19 பரவல் தடுப்பு வழிகாட்டல்களுடனும் இணைத்து பார்க்கப்பட வேண்டிய 1897 அம் ஆண்டின் 3 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளை சட்டத்தின் 4,5 ஆம் அத்தியயங்கள் தண்டனை சட்டக் கோவையின் 264 ஆவது அத்தியாயத்துக்கு அமைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.