கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தினை தயாரித்தல் உட்பட அதனை திருத்தம் செய்து நிறைவேற்றும் வரையில் சீனா எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
அத்துடன், துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமையானது, சீனாவுக்கு அதிருப்தியளிக்கும் வகையிலான விடயம் ஒன்று அல்ல என்றும் அவர் கூறினார்.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் சீன தரப்பில் எவ்விதமான பிரதிபலிப்புக்களும் காணப்படாமை தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமானது, வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சமின்றி முதலீடுகளை மேற்கொள்வதற்கான உறுதிப்பாடினை அளிக்கும் வகையிலானதாகும்.
இந்த விடயத்தில் சீனாவின் எவ்விதமான அழுத்தங்களும் காணப்படவில்லை. இலங்கையில் சட்டமியற்றும் பிரிவுக்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவாக அது தயாரிக்கப்பட்டு, சட்ட மா அதிபரின் அங்கீகாரத்துடனேயே அது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
பின்னர் அதற்கு எதிராக மனுத்தாக்கல்கள் செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு அமைவாக திருத்தங்களுடன் ஆணைக்குழுச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இலங்கையில் சாதாரணமாக சட்டமொன்றை இயற்றும் பொறிமுறைக்கு அமைவாகவே நிகழ்ந்த விடயமாகும்.
அத்துடன், அரசாங்கம் நீதித்துறையில் தலையீடுகளைச் செய்வதாக இருந்திருந்தால் பாராளுமன்றத்தில் நாம் சமர்பித்த சட்டமூல வரைபினை நீதித்துறை அவ்வாறே அங்கீகரித்திருக்கும். ஆனால் அவ்விதமாக எவ்வித தலையீடுகளும் நடைபெறவில்லை.
சட்டமூலத்தின் 74 பிரிவுகளில் 25 ஏற்பாடுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் இல்லாது விட்டால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, மற்றும், சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று நீதிமன்றம் கூறியிருக்காது. ஆகவே இலங்கையின் நீதித்துறை சுயாதீனமானதும், சுதந்திரமானதும் என்பது இங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாம் ஆணைக்குழுச் சட்டமூலத்தினை திருத்தங்களுடன் நிறைவேற்றியமையால் சீனா அதிருப்தி அடைந்துள்ளதாக கூறுகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவொரு பொய்யான பிரசாரமும் ஆகும். எமது நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக நாம் சட்டத்தினை தயாரித்துள்ளோம். அதன்மூலம் வெளிநாட்டு முதலீடுட்டாளர்களுக்கான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த விசேட பொருளாதார வலயம் மூலமாக வேலைவாய்ப்புக்கள், நவீன தொழில்நுட்பம், அறிவுப் பரிமாற்றம், தொடர்பாடல் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பாரிய முன்னேற்றத்தினை நாடு காணவுள்ளது. ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் மாற்றம் ஏற்படவுள்ளது.
ஆகவே அவ்விதமான சாதகமான விடயங்கள் மறைக்கப்பட்டு எதிர்மறையான விடயங்கள் வெகுவாக பிரசாரம் செய்யப்படுகின்றன. உண்மையில் இவ்வகையான விசேட பொருளாதார வலயங்களின் நன்மைகளை அடுத்துவரும் காலப்பகுதியில் உணர்ந்து கொள்ள முடியும் என்றார்.