உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துள்ளது.
இராணுவ ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரொனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இன்று முதல் அமுலாகும் வகையில் திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றைய முன் தினம் கொழும்பில் உள்ள முன்னிணி ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற தனது சகோதரியின் மகளின் திருமண நிகழ்வில் இராணுவத் தளபதி கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்த புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இராணுவத் தளபதியின் சகோதரியின் மகள்கள் இன்னும் கல்வி கற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், தனது சகோதரியின் மகளின் திருமண நிகழ்வில் இராணுவத் தளபதி கலந்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல்களை இராணுவம் மறுத்துள்ளது.
இக்கட்டான இந்த தருணத்தில் பொறுப்புடன் செயல்படவும், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் இராணுவம் வேண்டுகோள் விடுத்தது.