தற்போதைய அரசாங்கம், வெள்ளை வேன் கலாசாரத்திற்கு அப்பால் கறுப்பு வேன் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல குற்றம் சுமத்தினார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2015 க்கு முன்னர் வெள்ளை வேன் கலாசாரம் இருந்தது; இன்று மீண்டும் இந்த அரசாங்கம் வெள்ளை வேனைக்குப் பதிலாக கறுப்பு வேன் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளது.
சுஜீவ கமகே என்ற ஊடகவியலாளர் கண்கள் கட்டப்பட்டு கடத்தப்பட்டு தாக்கப்பட்டு வீதியில் போடப்பட்டுள்ளார். இன்று அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன் பின்னால் யார் உள்ளனர்? நாட்டு மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அதை கண்டு கொள்ளாது உள்ளனர்.
நாட்டில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்ற வண்ணமுள்ளன. அன்மையில் அங்கங்கள் வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று அதன் அடுத்த கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையை காண்கிறோம்.
மக்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் சிக்கியுள்ளமைக்கு அப்பால் இன்று வெளியே இறங்க முடியாத நிலையில் இந்த நாட்டு அரசாங்கத்தின் பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.