
இலங்கையில் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படாவிட்டால், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்றும் அதன் விளைவாக நிலைபேறான சமாதானத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் பாதிக்கப்படக் கூடும் என்றும் அஞ்சுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலக்கு வைக்கப்படும் இலங்கையின் முஸ்லிம் சமூகமும் அதிகரித்துவரும் ஓரங்கட்டப்படலும் என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அண்மைக் காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தீர்மானங்கள் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்திருப்பதுடன் அந்தச் சமூகத்தை ஓரங்கட்டும் வகையிலும் அமைந்துள்ளன.
அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள், தீர்மானங்கள் மற்றும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள் என்பன இலங்கையின் மொத்த சனத்தொகையில் 9 சத வீதமாக உள்ள முஸ்லிம் சமூகத்தின் மீது பாகுபாடு காண்பிக்கும் வகையில் அமைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அண்மைக்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயத் தகனத்துக்கு உட்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானம் மற்றும் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடமுடியும்.
இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரத்தையும் எதிர்காலத்தில் வன்முறைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பையும் இந்தச் சம்பவங்கள் வெளிக்காட்டியுள்ளமை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம்.
இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையும் இத்தகைய கரிசனைகளைப் பிரதிபலித்திருந்தன. அத்தோடு சர்வதேச சட்டங்களை அனுசரித்து, அதற்கேற்றவாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் புதிதாகக் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்கூட்டிய தடுப்புநடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படாவிடின் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்றும் அதன் விளைவாக நிலைபேறான சமாதானத்தை உறுதிசெய்வதற்கான முயற்சிகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் நாம் அஞ்சுகினறோம்.
$ads={1}
இம்மாதத்தில் கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதிக்கு இடைப்பட்ட 9 நாட்களில் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அமைச்சரவை யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் என்பன பதிவாகியுள்ளன.
அவற்றின் புர்கா மற்றும் நிகாபை தடைசெய்வதற்கான அமைச்சரவை யோசனை, மத்ரஸா பாடசாலைகளைத் தடைசெய்வதற்கான அமைச்சரவை யோசனை, நாட்டில் வெளிவரும் அனைத்து இஸ்லாமிய நூல்களையும் கண்காணிப்பிற்கு உட்படுத்தல், இன மற்றும் மத ரீதியிலான அடிப்படைவாதச்செயல்கள், வன்முறைகளில் ஈடுபடுவோரைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் போன்ற விடயங்கள் பதிவாகியுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.






