
கிரிக்கெட் விளையாட்டில் கடந்த காலங்களில் நிலவிய கூட்டு முயற்சியை வெளிப்படுத்தினால் உலக கிண்ணத்தை இலங்கையினால் மீண்டும் வெல்ல முடியும். வரலாற்று சம்பவங்களை ஒரு படிப்பினையாகக் கொண்டால் கிரிக்கெட் அணி சிறந்த முறையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெறும். அனைத்து தரப்பினரும் ஓரணி என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
உலக கிண்ணத்தை இலங்கை வென்று 25 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு உலக சம்பியன் அணியில் இடம்பெற்ற கிரிக்கெட் வீரர்களை பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் அலரி மாளிகையில் புதனன்று நடைபெற்ற வைபவத்தில் கலந்துக் கொண்டு பேசிபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த வைபவத்தின்போது உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு நினைவுச் சின்னங்களை பிரதமர் வழங்கினார். அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கவும் இவ் வைபவத்தில் கலந்துகொண்டிருந்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், ‘உலக கிண்ணத்தை வென்று 25 வருடங்கள் நிறைவுப் பெற்றிருந்தாலும் இன்று வெற்றிப் பெற்றதை போன்ற ஓர் உணர்வு ஏற்படுகின்றது. எமது கிரிக்கெட் அணியினரது அபார திறமையினால் ஈட்டப்பட்ட இத்தகைய வெற்றியை என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.
'தாய் நாட்டை முன்னிலைப்படுத்தி அப்போதைய இலங்கை வீரர்கள் விளையாடினார்கள். வெறுமனே அதனை விளையாட்டாக கருதவில்லை. உலக கிண்ணத்தை இலங்கை சுவீரிக்கும் என ஆசிய நாடுகள் அப்போது எதிர்பார்க்கவில்லை. ஆனால் எமது அணி உலகக் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது' என்றார்.
-மெட்ரோ