ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றதாகும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டிய பிரதான காரணி தொடர்பில் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிறிதொரு விடயம் என்ன என்பதே இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதாவது MCC ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக, நடைபெறவிருந்த தேர்தலை நோக்காக கொண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் பிறிதொரு சிவில் கலவரத்தை உண்டாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது தொடர்பில் ஆராயப்பட்டிருக்க வேண்டும்.
$ads={1}
சஹ்ரான் மற்றும் அவர் சார்ந்தவர்களுக்கு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வது மாத்திரமே இலக்காக காணப்பட்டது.
ஆனால் அந்த தாக்குதலுடன் நாட்டிலுள்ள கத்தோலிக்க, சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய கலவரத்தை ஏற்படுத்தி அடுத்தடுத்த கட்டத்தில் என்ன நடக்கும் என்பதை சஹ்ரான் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே இது போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த அறிக்கையில் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. அதன் காரணமாகவே இதனை முழுமையற்ற அறிக்கையாக நாம் கருதுகின்றோம் என்றார்.