![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1NC1-4zXuEMgm4TqbakxpyfQgsNAA0QHUsAI-lDjlvBwpRekgY-DNVKGCwtUtDi5k1hUyfA9dJSSVRw7SdGyP4IaHb_Sq9RVoxHXnTRG7uOE7vUS7eKc5TYfzqzOFj5i2t3-e5XZ2hI4/s16000/1610150218027185-0.png)
இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி நேற்று (08) இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார்.
எனினும், குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது வரையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், செ.கஜேந்திரன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் சட்டத்தரணி சுகாஸ் மற்றும் யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி மணிவண்ணன் உள்ளிட்டவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.