முஸ்லிம் நாடுகளை பகைத்துக் கொள்ளும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் சுகாதார அமைச்சர் நாடாளுமன்றில் பொய்யுரைக்கின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு 190 நாடுகள் அனுமதி அளித்துள்ள நிலையில் ஏன் இலங்கையில் மட்டும் அனுமதி அளிக்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நாட்டில் வாழும் 20 லட்சம் முஸ்லிம்களை அரசாங்கம் நோகடிக்கவில்லை, உலகில் வாழும் இரண்டரை பில்லியன் முஸ்லிகளையும் நோகடிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் 54 நாடுகள் காணப்படுவதாகவும், போர் காலத்திலும் ஜெனீவா பிரச்சினைகளின் போதும் இந்த முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு உதவியதாகத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்ட போது ஈரான் அரசாங்கம் உதவியதாகவும் தாமே அந்த உதவியை கோரியதாகவும், இன்னமும் அந்தக் கடன் அடைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் நாடுகளையும் முஸ்லிம் தலைவர்களையும் பகைத்துக் கொண்டு சிங்கள வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் நீடித்தால் அது இந்த நாட்டுக்கு மேற்கொள்ளும் அழிவு என்பதனை தாம் சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இனவாத கொள்கைகளை முன்னிலைப்படுத்திய ஹிட்லர், S.W.R.D பண்டாரநாயக்க போன்றவர்கள் இனவாதத்திலேயே அழிந்து போன வரலாற்றை மறந்து விடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீடியோ இணைப்பு: https://fb.watch/2ULs0kN5AZ/