உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பிற்கானது என கூறப்படும் ஆயுர்வேத மருந்துகள் தொடர்பில் ஆராய்வுகள் செய்யப்படுவதாக கூறப்பட்ட போதிலும் சுகாதார அமைச்சின் தொழிநுட்ப குழுவிற்கு கூட அது தொடர்பில் பதிலளிக்க முடியவில்லை.
கேகாலை தம்மிக்கவினால் தயாரிக்கப்பட்ட பாணியை மருந்தாக அங்கீகரிப்படாமையால் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கேகாலையிலுள்ள தம்மிக்க என்ற நபர் மற்றும் பிரிதொரு வைத்தியர் தயாரித்த மருந்துகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இவர்களால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் ஆராய்விற்குட்படுத்தப்பட்டுள்ளதால் முடிவுகள் கிடைக்கும் வரை அவற்றை பகிர்ந்தளிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் இரகசியமான முறையிலும் சந்தைகளிலும் இவை மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.
கேகாலை மாவட்ட அதிபர் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். முடிவுகள் எவ்வாறு கிடைக்கும் என்பது தொடர்பில் எமக்கு தெரியாது.
குறைந்தபட்சம் பரிசோதனைகள் எந்தளவிற்கு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதும் தெரியாது. சுகாதார அமைச்சில் நடைபெற்ற தொழிநுட்பகுழு கூட்டத்தின் போது கூட நாம் இவ்விடயம் குறித்து வினவிய போது யாரும் அதற்கு பதிலளிக்கவில்லை.
தொழிநுட்ப குழுவிலுள்ள யாரும் இது தொடர்பில் தெளிவான பதிலைக் கூறவில்லை. அநுராதபுரத்தில் ஆராய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்ற போதிலும் அது எவ்வாறு இடம்பெறுகிறது , முடிவுகள் ஏன் தாமதமாகின்ற என எந்த விடயமும் எமக்குத் தெரியாது.
ஆராய்வுக்குழு இடைக்கால அறிக்கையை கூட இது வரையில் சமர்ப்பிக்கவில்லை. ஆனால் ஆராய்வுகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதனை மருந்தாக அங்கீகரிக்காத போதிலும் பகிர்ந்தளிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இது தேசியத்துவம் அல்லது ஆயுர்வேத மருந்து உற்பத்தி தொடர்பான பிரச்சினை அல்ல. அதற்கும் அப்பால் பல பிரச்சினைகள் உள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக ஆயுர்வேத வைத்தியத்துறை மீது மக்களுக்குள்ள நம்பிக்கை இல்லாமல் போனால் அதற்கான முழு பொறுப்பையும் இதன் பின்புலத்திலுள்ளவர்களே ஏற்க வேண்டும் என்றார்.
மூலம் - வீரகேசரி