சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களினுடைய சம்மேளத்தின் (FIFA) இந்த ஆண்டுக்கான நடுவர்களில் ஒருவராக இலங்கை - கல்முனையைச் சேர்ந்த ஏ.பி.எம். ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து 2021 ஆம் ஆண்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 6 நடுவர்களில், ஜப்ரான் மட்டுமே தமிழ் பேசும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவராக திகழ்கிறார்.
$ads={2}
இதேவேளை, வடக்கு - கிழக்கு மாகாணங்களிலிருந்து முதன் முதலாக 'FIFA' நடுவராகத் தெரிவாகும் வாய்ப்பு தனக்குக் கிடைத்துள்ளதாகவும் ஜப்ரான் மகிழ்ச்சி தெரிவிக்கின்றார்.
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நடுவர்களுக்கான தரம் - 3 (Grade - 3) தேர்வில் 2010ஆம் ஆண்டு வெற்றி பெற்றதை அடுத்து, உதைப்பந்தாட்ட நடுவராக தனது பயணத்தை 16ஆவது வயதில் இவர் தொடங்கினார்.
2017ஆம் ஆண்டிலிருந்து இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முதல் தர (Grade - 1) நடுவராக இவர் பணியாற்றி வருகிறார். இப்போது இவருக்கு 26 வயதாகிறது.
2010ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 150க்கும் மேற்பட்ட முக்கியமான கால்பந்து போட்டிகளில் - தான் நடுவராகப் பணியாற்றியுள்ளதாக, பிபிசி தமிழிடம் ஜப்ரான் தெரிவித்தார்.
அவற்றில் இலங்கை சாம்பியன் லீக், எப்.ஏ. கிண்ணம் மற்றும் ஜனாதிபதி கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளும் உள்ளடங்கும் எனவும் அவர் கூறினார்.
மேலும் மாலைத் தீவு சாம்பியன் லீக் உதைப்பந்தாட்டப் போட்டிகளிலும் இவர் இரண்டு முறை நடுவராகப் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நடுவர் அகாடமியில் (AFC REFEREE ACADEMY) நான்கு ஆண்டுகளைக் கொண்ட கற்கை நெறி ஒன்றினை பயில்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜப்ரான், அந்தக் கற்கை நெறியின் இரண்டுஆண்டுகளை தற்போது பூர்த்தி செய்துள்ளார்.
மேலும் FIFA வினால் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படுகிற நடுவர்களுக்கான பயிற்சிப்பட்டறையில் மூன்று தடவை இவர் பங்கேற்றுள்ளார்.
$ads={2}
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக 2018ஆம் ஆண்டு, அரசு தொழிலைப் பெற்றுக் கொண்ட இவர், தற்போது கல்முனை ஸாஹிரா கல்லூரியில் கடமையாற்றி வருகின்றார்.
"சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு நடுவராக வரவேண்டும் என்பது எனது நீண்ட கால இலக்கு. அதற்காக ஏராளமான கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்திருக்கிறேன். வாழ்க்கையில் கிடைத்த வேறு சில வாய்ப்புகளையும் இழந்திருக்கிறேன். இருந்த போதும் எனது ஆசை நிறைவேறியிருக்கிறது. எனது பயணத்தில் சர்வதேச ரீதியாக நான் வைத்திருக்கும் முதற்படி என்று இதனைக் கூறலாம். இந்தப் பாதையில் இன்னும் நான் கடந்து செல்ல வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது" என்கிறார் ஜப்ரான்.