அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டு கப்பலான எம்.வி. யுரோசன் திருகோணமலை துறைமுகத்திலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறை ஒன்றில் மோதிய நிலையில் சிக்குண்டுள்ளது.
கப்பலில் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33,000 மெற்றிக் தொன்னும் 720 மெற்றிக் தொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கப்பலை நகர்த்தும் பணிகளில் இலங்கை கடற்படையினரும் கரையோர பாதுகாப்பு அதிகார சபையும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியா நாட்டுக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எம்.வி. யுரோசன் சரக்குக் கப்பல் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி அபூதாபியிலிருந்து சீமெந்துக்கான திரவப் பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களுடன் இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தை நோக்கி பயணமாகியுள்ள நிலையிலேயே நேற்று நண்பகல் சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் ஆழமற்ற நீரோட்டத்தில் பயணித்த நிலையில் சுண்ணாம்பு பாறைகளில் மோதியுடன் கப்பலின் கீழ் தளம் பாறை ஒன்றில் சிக்குண்டதனையடுத்து கப்பலை நகர்த்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எம்.வி. யுரோசன் கப்பலில் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33,000 தொன்னும், 720 மெற்றிக் தொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் எம்.வி. யுரோசன் கப்பலை நகர்த்தும் கடல் கீழ் மீட்பு முயற்சிகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர். இதன்போது கப்பலின் கீழ் பகுதியில் ஒரு பாகம் கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் கப்பலின் கீழ் பாகத்தில் ஓரளவு சேதமும் ஏற்பட்டுள்ளதையும் இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
-ஆர்.யசி