அரசாங்கத்தின் அனைத்து விடயங்களையும் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். அப்படியானால் கொரோனாவினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்குவதால் பிரச்சினை இல்லை என நிபுணர்கள்குழு தெரிவித்திருந்தும் அரசாங்கம் தொடர்ந்து சடலங்களை எரித்து வருகின்றது. முஸ்லிம்கள் ஜனாசாக்களை எரிக்கும் பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முடியும் என தெரிவித்து, சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையை அரசாங்கம் செயற்படுத்தாமல் இருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக அரசாங்கத்துக்கு தீர்மானம் எடுக்கமுடியாது. அது சுகாதாரம் தொடர்பான பிரச்சினை என்பதால் சுகாதார பிரிவினரின் தீர்மானத்துக்கமைய செயற்பட தயார் என அரசாங்கம் தெரிவித்து வந்தது. அதன் பிரகாரம் கொரோனவினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாமா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சினால் விசேட நிபுணர்கள் குழுவொன்றை நியமித்திருந்தது. குறித்த குழு தனது அறிக்கையை கடந்த மாதம் இறுதியில் சுகாதார அமைச்சுக்கு கையளித்திருந்தது.
அத்துடன் அரசாங்கத்தின் தொழிநுட்ப குழுவின் வைரஸ் தொடர்பான நிபுணர்கள் இல்லை. அதில் சட்ட வைத்தியர்களும் அரசாங்க வைத்திய அதிகாரிகளின் ஆலோசனையாளர்களுமே இருக்கின்றனர். ஆனால் சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்ட நிபுணர்குழுவின் 11 பேரில் 06 பேர் வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்களாகும். ஏனையவர்கள் வேறு துறைசார்ந்த நிபுணர்கள். இவர்களின் அறிக்கையை அரசாங்கம் தற்போது மறைப்பது அரசியல் நோக்கத்துக்காகும் என்றார்.
-எம்.ஆர்.எம்.வசீம்