
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாத காரணத்தினால் கொரோனா நோய்த்தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் மாவட்ட மட்டத்திலேனும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு தமது சங்கம் கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
$ads={2}
இவ்வாறு பயணக் கட்டுப்பாடு விதிக்காமையினாலேயே இன்று நாள் தோறும் கூடுதலான எண்ணிக்கையில் நோய்த் தொற்றாளிகள் பதிவாகி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் மேல் மாகாணத்திலிருந்து அதிகளவானவர்கள் வெளி மாகாணங்களுக்கு செல்லக்கூடும் என்பதனால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாகவும், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக மேல் மாகாணத்தில் மட்டும் அதிகளவில் கொரோனா தொற்றாளிகள் பதிவாகி வந்த நிலையில் தற்பொழுது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொற்றாளிகள் பதிவாகி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மட்டுமன்றி திருகோணமலை, அனுராதபுரம், காலி, ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களிலும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் நேற்றைய தினம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.