நாட்டின் அனைத்து பாடசாலைகளில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்த்திட்டங்களை மிக விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கிராமதுடனான கலந்துரையாடல் செயற்திட்டத்தின் ஆறாவது கூட்டத்தில் நேற்று (16) கலந்துக்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயர் தரத்தினை நிறைவு செய்த மாணவர்களுக்கு தொழில் கல்வியை பெற்றுக்கொடுக்க, உரிய அமைச்சுடன் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றினை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கவுடுல்ல நீர் விநியோக திட்டத்தின் ஊடாக 10 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்கட்டணங்களை செலுத்த முடியாத பாடசாலைகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சூரிய சக்தியை பயன்படுத்தும் வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதியினால் தீர்மானிக்கபட்டுள்ளது.
இதன் ஊடாக இலவசமாக மின்சாரத்தை பெற்றுக்கொடுக்கவும் மின்சாரசபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரேதச பாடசாலைகள், வைத்தியசாலைகளில் காணப்படும் குறைப்பாடுகள் மற்றும் பிரதான, குறுக்கு வீதிகளை விரைவாக அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாரம்பரிய விவசாய முறைகளை எந்தவித தடையும் இன்றி முன்னெடுத்து செல்வதற்கான அனுமதிகளை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், பாரம்பரிய விவசாய துறையை பாதிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமென வனபாதுகாப்பு, பொலிஸ், சுற்றுசூழல் அதிகாரசபை உள்ளிட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், காடுகளை அளித்து புதிதாக விவசாயத்தில் ஈடுப்படுவதற்கு அனுமதிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று, காட்டு யானைகளினால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் நிலையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மின்சார வேலி மற்றும் தடைகளை நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு குறிப்பிட்டுள்ளார்.