
அரை மணி நேரம் கொண்ட இந்த தொலைபேசி அழைப்பில், ஜோர்ஜியாவில் தேர்தல் முடிவை மாற்றும் டிரம்பின் முயற்சி வெளிப்படுகிறது. இங்கு ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் 11,779 வாக்குகள் இடைவெளியில் வெற்றி பெற்றார்.
நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தாம் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற போதும், பைடனின் வெற்றியை ஏற்க டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். பல மாநிலங்களிலும் தேர்தல் முடிவை மாற்றும் டிரம்பின் முயற்சி தோல்வி அடைந்தது.
ஜோர்ஜியாவில் பல முறை தேர்தல் முடிவுகள் மீளாய்வுக்கும் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்மூலம் பைடன் அங்கு வெற்றியீட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் அந்த முடிவை உறுதி செய்திருக்கும் நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அதற்கு ஒப்புதல் அளித்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
குடியரசுக் கட்டிசியைச் சேர்ந்த ஜோர்ஜியா மாநில செயலாளர் பிரெட் ரெபன்பெர்கருக்கு அந்த தொலைபேசி அழைப்பில், “இதனைச் செய்ய நான் எதிர்பார்க்கிறேன். ஒரு வாக்கு மாத்திரம் அதிகமாக, வெறும் 11,780 வாக்குகள் எனக்குத் தேவையாக இருக்கிறது. அது மாநிலத்தில் நாம் வெற்றிபெறப் போதுமானது” என்று டிரம்ப் குறிப்பிடுகிறார்.
எனினும் ஜோர்ஜியாவின் தேர்தல் முடிவுகள் சரியானது என்று அதற்கு ரெபன்பெர்கர் டிரம்புக்கு பதிலளித்திருப்பது அந்த ஒலிப்பதிவில் பதிவாகியுள்ளது.
மேலும், ஜோர்ஜியா மாநில தேர்தல் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் டிரம்ப் அந்த ஒலிப்பதிவில் கூறுகிறார்.
டிரம்பின் தொடர் அழுத்தம் மற்றும் மிரட்டல் தொனியிலான பேச்சுக்கு பதிலளித்த ரெபன்பெர்கர், “உங்களிடம் தகவல்களைச் சமர்ப்பிக்கும் நபர்கள் இருக்கிறார்கள். அதேபோன்று எங்களிடமும் இருக்கிறார்கள். எனவே, இந்த விவகாரம் குறித்து நீதிமன்றமே ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஏனெனில், நாங்கள் எங்கள் தரவுகள் சரியானவை என்று உறுதியாக நம்புகிறோம்” என்று பதிலளித்துள்ளார்.
அமெரிக்க அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஒலிப்பதிவு குறித்து இதுவரை வெள்ளை மாளிகை கருத்தேதும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடந்த கடந்த நவம்பர் 3ஆம் திகதி முதல், அதில் பெரியளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி வரும் டிரம்ப், அதற்குரிய எவ்வித ஆதாரத்தையும் இதுவரை அளிக்கவில்லை.
மறுவாக்கு எண்ணிக்கை, சட்டரீதியிலான முறையீடுகளுக்கு பின்னர், அமெரிக்காவின் 50 மாநில நிர்வாகங்களும் இறுதி தேர்தல் முடிவுகளை ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. மேலும், பைடனின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட 60 வழக்குகளை அந்த நாட்டு நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளன.
ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வரும் ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
Trouble has further mounted for @realDonaldTrump, as in a new audio recording that has come to light, he can be heard pressurising Georgia's top election officials to help overturn the election result. @PriyankaSh25 speaks to @Jags_Dave for more pic.twitter.com/VsvJcg9h3W
— WION (@WIONews) January 4, 2021