காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இரகசிய சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இரகசியமாக வருவதற்கு வசதியாக இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நான்காவது சுரங்கப்பாதை இது என்றும் சர்வதேச எல்லையைத் தாண்டி வர இந்த சுரங்கப்பாதைகளைப் பயங்கரவாதிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
மேலும், சர்வதேச எல்லையில் ஆளில்லா விமானங்கள் மூலம் உணவு மற்றும் ஆயுதங்களைப் பாகிஸ்தான் இட்டுச்செல்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்.எஸ் ஜாம்வால் கூறுகையில், 'சுமார் 150 முதல் 175 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதையைச் சர்வதேச எல்லையில் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். சுமார் 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, 2 முதல் 3 மீட்டர் சுற்றளவு கொண்டது.இந்த சுரங்கப்பாதை 6 ஆண்டிலிருந்து 8 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம்' என்றார்.