கண்டி மாநகரசபையை அண்மித்த பகுதிகளிலுள்ள 3 பாடசாலைகளில் 3 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் முழுமையாக கிருமி நீக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,
கண்டி மாநகர சபையை அண்மித்த பகுதிகளிலுள்ள 3 பாடசாலைகளில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இம் மூன்று பாடசாலைகளில் ஒவ்வொருவர் என்ற அடிப்படையில் 3 பேருக்கு மாத்திரமே தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு குறித்த பாடசாலைகளில் தொற்று நீக்கல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே பெற்றோர் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
கண்டி மாநகரசபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட சகல பாடசாலைகளையும் தூய்மைப்படுத்தி முழுமையாக பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்.
அதே வேளை எதிர்வரும் நாட்களில் தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளனவா என்பது தொடர்பிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதற்கான நடவடிக்கைகள் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.