வெளிநாட்டில் பணியாற்றும் தனது மனைவியை நாட்டுக்கு அழைத்துவர உதவி செய்யுமாறு கோரி கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் 216 அடி உயரமான தொலைபேசி கோபுரத்தில் ஏறி நின்று 24 வயதான நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இவரது இந்த போராட்டம் நேற்று (16) முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமானது. நீர்கொழும்பு பிடிப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு போராட்டத்தில் குதித்தவராவார்.
$ads={2}
பல வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி ஜோர்தானுக்கு தொழிலுக்காகச் சென்றதாகவும். கடந்த 9 மாத காலமாக அவர் அங்கு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அனைத்து விபரங்களும் அடங்கிய ஆவணங்களை வெளிநாட்டு அமைச்சுக்கு வழங்கியதாகவும் அமைச்சு இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தபோதும் அமைச்சில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தனது மனைவியை நாட்டுக்கு அழைத்த வருவதற்காக தம்மிடம் 4 இலட்சம் ரூபா கோரியதாகவும் அந்த நபர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
தன்னிடம் அந்தத் தொகை இல்லாததன் காரணமாக சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தபோது வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி 4 இலட்சம் ரூபா பணம் கோரியமை தொடர்பாக ஒலிப்பதிவு இருக்குமாயின் அதனை தன்னிடம் வழங்குமாறு அமைச்சர் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற கம்பஹா பொலிஸார் அவருடன் உரையாடியதனையடுத்து இன்று (17) காலை10.30 மணியளவில் சுற்றுலாத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் தொலைபேசி கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.
ஜோர்தானில் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த நபரின் மனைவியை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்ற வாக்குறுதியை அதிகாரிகள் வழங்கியதன் பின்னர் அந்த நபர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த நபரின் மனைவி விசா இன்றி ஜோர்தானில் தங்கியிருந்ததன் காரணமாக அங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சில மாதம் சிறை வைக்கப்பட்டதன் பின்னர் தற்போது அங்கு முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.
-மெட்ரோ நியூஸ்