பனியில் உறைந்த புராதன மிருகம்: 20 ஆயிரம் ஆண்டுகள் முன்பு இறந்த உறுப்புகள் சிதையாமல் கண்டெடுப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பனியில் உறைந்த புராதன மிருகம்: 20 ஆயிரம் ஆண்டுகள் முன்பு இறந்த உறுப்புகள் சிதையாமல் கண்டெடுப்பு!


20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கருதப்படும் காண்டாமிருகம் ஒன்றின் உடல் பெருமளவில் சிதையாமல் மீட்கப்பட்டுள்ளது.

காரணம் அதன் உடல் பெர்மாஃப்ராஸ்ட் எனப்படும் நிரந்தர உறைபனிப் பரப்பில் புதைந்து கிடந்ததுதான். ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் அந்த நிரந்தரப் பனிப் பரப்பு உருகியதால் வெளியில் தெரிந்த இந்த உடலை உள்ளூர் மக்கள் மீட்டனர்.

கெட்டுப் போகாமல், அற்புதமாகப் பதப்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த உடல் பனி ஊழி (ஐஸ் ஏஜ்) காலத்தை சேர்ந்த 'வுல்லி ரைனோ' வகை காண்டாமிருகத்தினுடையது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு ரஷ்யாவின் யகுடியாவில் உள்ள அபிஸ்கி வட்டாரத்தில் உள்ள நிரந்தர உறைபனி உருகியதால் இந்த உடல் வெளியே தெரிந்தது.

இந்த விலங்கின் உள் உறுப்புகள் கூட பெரும்பாலும் சிதையவில்லை. இது இந்தப் பிராந்தியத்தில் கிடைத்த பழங்கால விலங்கு உடல்களில் சிறப்பாகப் பதப்படுத்தப்பட்ட நிலையில் கிடைத்தவற்றில் ஒன்று.

மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்வதற்காக இந்த உடல் அடுத்த மாதம் ஓர் ஆய்வகத்திடம் ஒப்படைக்கப்படும்.

பனிச்சாலைகள் அமைவதற்காக இப்போது காத்திருக்கிறார்கள். அமைந்த பிறகு, அந்த உடல் யாகுட்ஸ்க் மாநகரத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கே விஞ்ஞானிகள் அதன் உடல் மாதிரிகளை எடுத்து கதிர்வீச்சு கரிம (ரேடியோ கார்பன்) பகுப்பாய்வு செய்வார்கள்.

இளம் காண்டாமிருகத்தின் உடல்.

பிளைஸ்டோசீன் ஊழியின் பிந்தைய காலத்தில், அதாவது 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகள் முன்பு இந்த காண்டாமிருகம் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த காண்டாமிருகத்தின் உடலை பரிசோதித்த வேலரி பிளாட்நிகோவ் என்ற ஆய்வாளர் 3 அல்லது 4 வயது ஆனபோது, இது நீரில் மூழ்கியதால் இறந்திருக்கலாம் என்று ரஷ்ய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விலங்கின் பெரும்பங்கு மென்திசுக்களைக் காண முடிகிறது. குடலும், பாலுறுப்பும்கூட இருக்கிறது.

"மூக்கின் அருகே இருந்த சிறிய கொம்பும் சிறையாமல் கிடைத்துள்ளது. இது மிகவும் அரிதானது. ஏனெனில் வழக்கமாக அந்தக் கொம்பு விரைவில் சிதைந்துவிடும்" என்று கூறியுள்ளார் வேலரி. இந்தப் பெண்மணி ரஷ்ய அறிவியல் கழகத்தில் (ரஷ்யன் அகாடமி ஆஃப் சயின்சஸ்) பணியாற்றும் ஒரு தொல்லுயிரியல் வல்லுநர். யகுடியா 24 டிவி என்ற ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்தக் கொம்பில் தேய்ந்ததற்கான தடயங்கள் உள்ளன. உணவுக்காக அந்த காண்டாமிருகம் அடிக்கடி கொம்பினை பன்படுத்தியுள்ளது என்பதே இதன் பொருள் என்கிறார் அவர்.

காண்டாமிருகத்தின் உடலுக்கு அருகே கிடந்த கொம்பு

டைரக்டியாக் ஆற்றின் கரையில் இந்த காண்டாமிருகத்தின் உடல் கடந்த ஆகஸ்ட் மாதம் உள்ளூர்வாசி ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது.

2014ம் ஆண்டு இன்னொரு இளம் வுல்லி ரைனோ காண்டாமிருகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே உள்ளது இந்த இடம். 2014ல் கண்டெடுக்கப்பட்ட உடலுக்குரிய காண்டாமிருகத்துக்கு சாஷா என்று விஞ்ஞானிகள் பெயரிட்டனர். சாஷா 34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டது.

22,000 ஆண்டுகளுக்கு முந்தைய பனி யுகக் கரடியின் உடல் கண்டெடுப்புஆறாவது பேரழிவு யுகத்தில் நுழைகிறோம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கைதோல், மயிர் மட்காமல் 56 ஆயிரம் ஆண்டுகள் புதைந்து கிடந்த ஓநாய் குட்டி

சைபீரியாவில் கடந்த சில ஆண்டுகளில் வுல்லி ரைனோ வகை காண்டாமிருகங்கள், மாமதம்*, குதிரைக் கன்று, நாய்க்குட்டிகள், குகை சிங்கத்தின் குட்டிகள் போன்றவற்றின் தொல்லுடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

(மாமோத் - mammoth) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பேருருவம் கொண்ட அழிந்துவிட்ட யானை போன்ற விலங்குகளை சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் மாமதம் என்று தமிழில் குறிப்பிடுகிறார். தம்முடைய 'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக' என்ற நூலில் இந்த சொல்லை அவர் பயன்படுத்தியுள்ளார்.)

கடந்த செப்டம்பர் மாதம், வடகிழக்கு ரஷ்யாவின் லையாகோவ்ஸ்கி தீவுகளில் பனி ஊழியில் வாழ்ந்து இறந்த ஒரு கரடியின் உடல் நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

புவி வெப்பமடைந்து வருவதால் ரஷ்யாவின் தூரக் கிழக்கு மற்றும் தூர வடக்குப் பகுதிகளில் உள்ள நிரந்தர உறைபனிப் பரப்பு பெருமளவு உருகிவருவதால் இதைப் போல பனியில் உறைந்து கிடந்த உடல்கள் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன.

மூலம்: பி.பி.சி 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.