கலால் வரித் திணைக்களம், கடற்படையின் உதவியுடன் மாரவில - தொடுவாவ பகுதியில் முன்னெடுத்த சிறப்பு சுற்றிவளைப்பொன்றில், 300 கோடி ரூபா பெறுமதி கொண்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் 200 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் இது தொடர்பில் 04 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களத்தின் பேச்சாளர் கலால்வரி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
கலால் வரித் திணைக்கள புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு நீண்டநாள் முன்னெடுத்த விஷேட விசாரணைகளுக்கு அமைய, கலால் வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆரியசிங்க போதரகமவின் நேரடி கட்டுப்பாட்டில், பிரதி கலால் வரி ஆணையாளர் ஒருவரின் கீழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அழைக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளைக் கொண்ட குழுவினரால் இந்த சுற்றி வலைப்பு முன்னெடுக்கப்பட்டதாக கலால் வரித் திணைக்களத்தின் பேச்சாளர் கலால்வரி ஆணையாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில், 100 கிலோ ஹெரோயினும் 100 கிலோ ஐஸ் போதைப் பொருளும் உள்ளடங்குவதாகவும், கலால் திணைக்களம் முன்னெடுத்த சுற்றிவளைப்பொன்றில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட அதி கூடிய போதைப்பொருள் தொகை இதுவாகும் எனவும் பேச்சாளர் கபில குமாரசிங்க சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
கடந்த ஒரு மாத காலமாக தகவல் ஒன்றின் அடிப்படையில் கலால் வரித் திணைக்களம் விஷேட விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அதில் கடற்படை புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இன்று அவர்களுடன் இணைந்து கலால் வரித் திணைக்களம் விஷேட சுற்றி வளைப்பை முன்னெடுத்தது.
இந்த போதைப்பொருட்கள், மாரவில, தெற்கு தொடுவாய பகுதியில் இருந்து பாரவூர்தி ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த மின் பிறப்பாக்கி ஒன்றுக்குள் மிக சூட்சுமமாக மறைத்து நாட்டின் பிற பகுதிகளுக்கு கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதே சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டு அவை கைப்பற்றப்பட்டன.
இன்று அதிகாலை அந்த சுற்றிவளைப்பை முன்னெடுக்கும் போது பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஒருவரின் சகாக்கள் என அறியப்படும் நால்வர், அங்கிருந்துள்ள நிலையில் அவர்களை கலால் வரித் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
இதன்போதும் பெட்டிகளிலும், பக்கட்டுக்களிலும் அடைக்கப்பட்டு ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் கடத்தலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினரும், கலால் வரித் திணைக்கள அதிகாரிகளும் கூறினர்.
$ads={2}
இந்நிலையில், இந்த போதைப்பொருள் கடத்தல், வர்த்தகத்துடன் தொடர்புடையது என நம்பப்படும் வெகனார், டோயோட்டா ரக கார்கள் இரண்டும், கே.டி.எச் ரக வேன் ஒன்றும் கலால் வரித் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் கனேமுல்ல மற்றும் தெமட்டகொட பகுதிகளைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரரணைகளில், இந்த போதைப்பொருளானது நாட்டிலிருந்து தப்பிச் சென்று டுபாயில் உள்ளதாக நம்பப்படும் ஜூட் எனும் போதைப்பொருள் கடத்தல் மன்னனினால் கடல் வழியாக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி அந்த வலையமைப்பு, அதனுடன் தொடர்புபட்டவர்கள், உள் நாட்டில் அவர்களின் பகிர்ந்தளிக்கும் வலையமைப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்த விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-எம்.எப்.எம்.பஸீர்