கிளிநொச்சி - பளை, பனிகையடி பகுதியில் வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைக்குள் தாக்குதல் முயற்சி ஒன்றிற்காக விடுதலைப் புலிகளின் வலையமைப்புக்களினால் வழிநடத்தப்பட்ட தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளன.
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் தமது 07 வயது பிள்ளையுடன் பயணித்த அவர்கள், கிளைமோர் வெடி ஒன்றையும் எடுத்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர்களின் வீட்டிலிருந்தும் ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
சுவிற்சர்லாந்தில் இருந்து இயங்கும் புலிகளின் வலையமைப்பு ஒன்றினாலேயே இவர்கள் இயக்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
வடக்கு, கிழக்கில் இரண்டு கிளைமோர் தாக்குதல்களை நடத்த இந்த வலையமைப்பு முயற்சித்து வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டிலுள்ள புலிகளின் வலையமைப்புக்கள், இலங்கைக்குள் தாக்குதல் நடத்த மேற்கொண்ட 15ஆவது முயற்சி இதுவென்றும் தெரிவித்துள்ளனர்.
நெடுங்கேணி காட்டில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவர், 2014 ஏப்ரல் 14ஆம் திகதி அன்று சுடப்பட்டு மரணமடைந்தனர். அதில் மரணமான கோபி என்பவரின் சகோதரனே சுவிஸில் இருந்து இந்த வலையமைப்பை இயக்கியதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கிறது.
கோபி என்ற கஜீபனின் தாய் வசிக்கும் வீட்டிற்கு எதிரில் வசித்த குடும்பமொன்றே நேற்று சிக்கியது. அவர்களின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு, தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் தன்னிடம் வெடிபொருட்களை தந்து விட்டு சென்றதாக, விசாரணையில் அந்த தம்பதி தெரிவித்தது. இதற்காக அவர்களின் வங்கிக்கணக்கில் பணமும் வைப்பிலிடப்பட்டுள்ளது.
கிளைமோரை கிழக்கு மாகாணத்திற்கு நகர்த்த முயன்றபோது சிக்கினர். பிறருக்கு சந்தேகம் ஏற்படாமலிருக்க தமது 07 வயது பிள்ளையையும் அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.