கொரோனாவினால் காவு கொள்ளப்படும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் நிபுணர் குழு தமது விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் நிபுணர் குழு தமது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவர் கேட்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம அதிகாரி யோசித ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின்படி தற்போது கொரோனாவினால் உயிரிழப்போரின் உடலங்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும் தகனம் தொடர்பிலேயே தனது பரிந்துரையை வழங்கியிருக்கின்றது.
இவ்விடயத்தில் எந்தவித அரசியல் தலையீடு இல்லை என யோசித குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்நிலையில் நிபுணர் குழுவின் அறிக்கையை துரிதமாக வழங்குமாறு பிரதமர் நிபுணர்களை கேட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
சமயங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அனைத்து மதங்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்ற வகையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதேவேளை, சுகாதார அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்த விடயத்திற்கு தீர்வொன்றை காண்பதற்கும் பிரதமர் தயாராகி வருவதாகவும் யோசித தெரிவித்திருக்கின்றார்.
கொரோனாவினால் காவு கொள்ளப்படும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான உரிமை வேண்டும் எனக்கோரி முஸ்லிம்கள் மத்தியில் இருந்து தற்போது கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்ற நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது.
இதேவேளை, கொரோனாவினால் காவு கொள்ளப்படுவோரின் உடலங்களை அடக்கம் செய்யும் போது அதிலிருந்து நீர் வழியாக கொரோனா வைரஸ் ஏனைய இடங்களுக்கு பரவுவது தொடர்பாக ஆதாரங்கள் இருப்பின் அதனை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி ஏற்கனவே அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இந்நிலையில், இது தொடர்பாக தொடர்ந்தும் நிபுணர் குழு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், இவ்விடயம் தொடர்பில் முழுமையான அறிக்கை இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.