கல்முனை மாநகர பொதுச் சந்தை பகுதியை இராணுவத்தினர் பொதுச் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து இன்று (28) சுற்றிவளைத்து அங்குள்ளவர்களுக்கு PCR மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொண்ட போது அங்கிருந்த சில வர்த்தகர்கள் கடைகளை அவசரமாக மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
இதேவேளை அங்கு 200 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கல்முனை தெற்கு சுகாதாரப் பிரிவில் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் இன்று கல்முனை மாநகர பொதுச்சந்தையை காலையில் இராணுவத்தினர் திடீரென சுற்றிவளைத்து சந்தைப்பகுதிக்குச் செல்லவோ வெளியேறவோ முடியாதவாறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
$ads={1}
இந்நிலையில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நேரடி கண்காணிப்பில் பொதுசுகாதார அதிகாரிகள் அந்தப் பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றும் பொருட்களை கொள்வனவுக்குச் சென்றவர்கள் உட்பட 200 பேருக்கு PCR மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளை எழுமாற்றாக மேற்கொண்டனர். இதன்போது சந்தை வர்த்தக சங்கத்தினர் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்.
இருந்தபோதும் சில கடை வர்த்தகர்கள் திடீரென கடைகளை மூடிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரியவருவதுடன் 200 பேருக்கு மேற்கொண்ட இந்த PCR மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளில் 27 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் இவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.00 மணி வரையில் கல்முனை தெற்கு சுகாதாரப் பிரிவில் 144 பேருக்கும் கல்முனை வடக்கு சுகாதாரப் பிரிவில் 11 பேருக்கும் கொரோனா தொற்றிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-கனகராசா சரவணன்