நவீனத்துவம் அடைந்து நாளுக்கு நாள் சவால்களை எதிர்கொள்ளும் நவீன உலகில் மனித நேயம் என்பது மண்ணில் புதைக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது.
மனித ஜீவிகள் மனித நேயம் என்ற அணிகலனை அணியவே அவன் பேரழகாகின்றான். அதனாலேயே மனிதநேயங்களை காட்டிச் சென்றவர்களில் வைரங்களாக மிளிரும் அன்னை தெரேசா போன்றோர் இன்னும் எம்மிடையே பேரழகாக திகழ்கின்றனர்.
நாகரீக தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முற்பட்ட சமூகத்தில் உண்மையில் மனித நேயம் மனித குலத்திடையே வியாபித்து இருந்தது. அது மனிதன் மனிதனுக்கு காட்டும் நேயம் என்பதையும் தாண்டி இருந்தது என்பதற்கு வாடிய முல்லைக்கொடிக்கு தனது தேரினை ஈந்த பாரியின் நேயம் தக்க சான்றாகும்.இவ்வாறு உண்மையான மனிதநேயம் தன்னலம் கருதா பொது நலத்தில் தான் உள்ளது.
ஆனால் இன்றைய காலத்தில் மனிதநேயத்தின் நிலைதான் என்ன? மனிதநேயம் மக்கிப் போகும் மனித சமுதாயமே இது! எவன் விழுந்தாலும் பரவாயில்லை நான் மட்டும் முன்னேறிச் சென்றால் போதுமானது என என்னும் சுயநலமிக்க நவ உலகம் இது. நமது என்ற நிலை தாண்டி நான் எனும் குறுகிய வட்டத்துக்குள் சுருங்கிவிட்டது மனிதகுலம் இதற்கு அப்பால் அழகிய மனித நேயப் பண்புகளை கொண்டு வாழ்வோரை இனம், மதம், நாடு தாண்டி தேடிக்கண்டுப்பிடிக்க தான் வேண்டியதாயிற்று..
$ads={2}
சுரண்டப்படும் வளங்களும் அதிகரித்த பொன்,பொருள் மீதான போட்டிகளும் இரக்கங்கள் இரங்கி பண கிறுக்குகள் ஏறி மனிதன் சக மனிதனை மதிக்காத மனங்களை உருவாக்கி விடுகின்றன.அதுமட்டுமன்றி தன் இனம் அளித்து அதன் வெற்றியில் திளைக்கும் நிலை உருவாகி மனிதநேய பண்புகள் மறைந்து வரும் சமுதாயமாக நவ உலக மனிதகுலம் காணப்படுகின்றது.
இன்றைய சூழலில் காசு இல்லாமல் எதுவும் கிடைக்காது கரன்சி(currency) இருந்தால் மட்டுமே கதவுகள் திறக்கப்படுமளவு எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது. வணிக நோக்கங்களுக்காகவும் சுயநலன்களுக்காகவும் இயங்கும் கல்விக் கூடங்களும், மருத்துவமனைகளும் , சமூக நிறுவனங்களும், அரசியல் களங்களும் சேவை என்பதையும் மறந்து பணத்தை இலக்காகக் கொண்டு உருவாக உருவாக அன்பு, அந்நியோன்னியம், இரக்கம், கருணை, சமூகநலன் பேணாமை போன்ற மனிதநேயப் பண்புகள் எம்மை விட்டும் தூரமாகி விட்டன. இதனாலேயே இன்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவிரவாதம், மத, இன ரீதியான மோதல்கள், இயற்கை பேரிடர் போன்ற இன்னோரன்ன சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
இன்று சிறுவர்களுக்கு எதிரான கற்பழிப்புகளும் அதிகமாகிவிட்டன. இது இரக்கம் கருணை என்பதையும் தாண்டி காட்டுமிராண்டித்தனமான மனிதநேயமற்ற செயலாக மாறிவிட்டது. அத்துடன் இன்று பகிடிவதை என்ற பெயரில் பல்கலைக்கழகங்களில் நடக்கும் அநியாயங்கலும் மனிதநேயமற்ற செயல் ஆகும். மனிதநேயத்தை ஊட்ட வேண்டியவர்களே அதனை உயிரிழக்கச் செய்கின்றனர் அங்கு.
இவ்வாறு எண்ணிலடங்காத உதாரணங்களை எம் சமுதாயத்தில் இருந்து எடுத்துக்காட்ட முடியும். மியான்மார் சிரியா போன்ற நாடுகளில் குழப்பங்களுக்கான காரணமும் சிதைந்து போன மனித நேயம் என்று கூறமுடியும். அரசியல் நோக்கங்களுக்காக ஓர் இனத்தவர் இன்னோர் இனத்தினரால் தாக்கப்படுகின்றனர்; ஒரு மதத்தினருக்கு வழங்கப்படும் உரிமைகள் மற்றுமொறு மதத்தினருக்கு மறுக்கப்படுகின்றது. இது மட்டுமா இயற்கையின் பால் மனித நேயம் மறைவதும் சொல்லிலடங்காத ஒன்று.
மரங்கள் வெட்டப்படுகின்றன, காடுகள் அழிக்கப்படுகின்றன இதனாலேயே இன்று இயற்கையின் சீற்றங்களும் எமக்கு சவாலாக அமைந்து விடுகின்றது. இவ்வாறு அடுக்கி கொண்டே போகலாம் மறைந்து வரும் மனிதநேய பண்புகளையும் அதன் விளைவுகளையும்.
இருப்பினும் மனித நேயம் முற்றாக மறைந்து விடவில்லை ஆங்காங்கே சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். இன்று வல்லரசுகள் சிற்றரசுகள், ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பாராது உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கண்ணுக்குத் தெரியாத ஆட்கொல்லி கொரோனாவும் மனிதநேயத்தை ஒருபக்கம் வெளிக்கொண்டுதான் வந்துதுள்ளது என்பதையும் மறுக்க இயலாது. தம் உயிரையும் பொருட்படுத்தாது மக்களின் உயிர்களை காப்பாற்ற களமிறங்கிய வைத்தியர்களதும் தன்னார்வலாளர்களதும் இந்த முயற்சியை என்னவென்றுதான் சொல்வது அவ்வாறு இருக்கவே இன்று ஓரளவேனும் உயிரை காத்துக் கொள்ள முடிகின்றது. அவர்களும் மனிதநேயம் மறந்து வாழ்ந்தால் இன்றைய நிலைதான் என்ன….!! மனித நேயத்தின் அவசியத்தை உணர்த்த இதைவிட ஒரு சந்தர்ப்பம் அமையும் என்பதில் சந்தேகம்தான்.
மனிதநேயம் குறித்து ஒவ்வொரு மதங்களும் அழகாகவே போதித்துள்ளன. அதன்படி இஸ்லாமும் மனித நேயமும் குறித்து அழகாக தெளிவுப்படுத்தியுள்ளது. திருக்குர்ஆனில் "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மனிதன் மனிதனுக்கு காட்டும் மனித நேயப் பண்புகளை எடுத்துக்காட்டி இருப்பது உண்மையில் அது மனிதனையும் அவனது சமுதாயத்தையும் நல்வழிப்படுத்த அத்தியாவசியமாக அமைகின்றதானாளாகும். அவ்வாறு இருக்கையில் மறைந்துவிடும் மனிதநேயப் பண்புகள் தொடருமானால் இன்னும் எத்தனையோ துயரங்களை நாம் அனுபவிக்க வேண்டித்தான் வரும்.
இன்று எமது சமுதாயத்தில் உறவுகளை புறக்கணித்து நிம்மதியைத் தொலைத்து இயந்திரம் போல் இயங்கும் இந்த வாழ்க்கை மறக்கப்பட்ட மனிதநேயப் பண்பின் ஒரு விளைவாகும் . அத்துடன் மனிதர்களாக நாம் ஒன்றான போதிலும் இனம் மதம் பிரதேசம் என்ற அடிப்படையில் பிரிவு பட்டு நிற்பதும் இதனாலேயாகும்.
உண்மையில் மனிதன் பிறப்பிலேயே மனிதநேயம் கொடுக்கப்பட்டவன், ஆனால் அவன் அறிவியல் வளர்ச்சியில் மிதந்து உள்ளங்கைக்குள் உலகத்தை சுருட்டிக் கொள்ள முற்படும் போது மனிதநேயப் பண்புகளும் சுருங்கிவிடுகின்றது. பொதுவாக எண்ணங்கள் போலவே வாழ்வும் செம்மையாகின்றது. அதன்படி எண்ணங்களின் பிரதிபலிப்பே மனிதநேயங்ளாகும்.
$ads={2}
ஆகவே எமது எண்ணங்களை வலுப்படுத்த வேண்டும் எம்மிடையே மனிதநேயப் பண்புகள் வளர்க்கப்பட வேண்டும் மனிதநேயம் புறந்தள்ளப்படும் நிலை மாற வேண்டும். அவ்வாறு மனிதப் பண்புகள் தலைதூக்கும் சந்தர்ப்பத்தில் நிச்சயம் நல்ல சமுதாயத்தை நாம் கட்டியெழுப்ப முடியும், சமூகத்துக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதோடு இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களையும் ஓரளவேனும் வெற்றிக்கொள்ள முடியும் என்பதையும் மறுப்பதற்கு முடியாது.
ஆகவே ஒவ்வொரு தனிமனிதனும் மனித நேயப் பண்புகளை தன்னுள் வளர்ப்பது என்பது நாகரீகமிக்க நவ உலகில் அவசியமான ஒன்றாகும்.
"வழித்தடம்" - All University Muslim Student Association
எஸ்.ஜே.எப் பர்வின்
கொழும்பு பல்கலைக்கழகம்