மொறட்டுவை, எகொட உயன பகுதியில் பாதசாரி கடவையில் வீதியை கடந்து கொண்டிருந்தவர்கள் மீது அதிகவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 1, 7 வயதான இரண்டு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிறுமிகளின் தாயாரான கர்ப்பிணி பெண் உயிராபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கர்ப்பத்தில் இருந்த கரு உயிரிழந்துள்ளது.
நேற்று முன்தினம் (4) இரவு இந்த சம்பவம் நடந்தது.
20 வயதான லஹிரு பெர்னாண்டோ என்ற இளைஞரால் இந்த விபத்து ஏற்பட்டது. மோட்டார் சைக்கிள் மோதியதில், 1 வயதுடைய சிறுமி 10 மீட்டர் தூரத்திலும், 7 வயது சிறுமி சுமார் 20 மீட்டர் தூரத்திலும் சடலமாக இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கோபமடைந்து, இளைஞனை தாக்கியுள்ளனர். பின்னர் பொலிசார் வந்து இளைஞனை மீட்டனர். பொலிசாரின் பிடியில் இருந்த போதும் மக்கள் தாக்க முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் இளைஞனை பொலிசார் மீட்டு சென்றனர்.
இந்த விபத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த இளைஞன் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி பாணந்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 15,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தினால் திருந்தாத இளைஞன் நேற்று முன்தினமும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்தை ஏற்படுத்தினார்.
அவர் இரவில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி அதை வீடியோ பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவிடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ள ஒருவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் 23 வயதான கர்ப்பிணி பெண்ணே படுகாயமடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.