![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPjN_m4e2TjWF-Y66kK7Ana97JSTL-DGCAPxGilY3kiH4qtXvz89thN-gNoAJmxR9iswKprfjQCxiLmxqozG-nyMeOeb93zmXoqvKkyi09RboqZDe5PGaAk_hYsqOljqkfhDYSwP-Qm8s/s16000/ruwan-wijewardene.jpg)
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் சடலங்களைத் தகனம் செய்வது தொடர்பில் சர்ச்சையொன்று தோற்றம் பெற்றிருக்கும் நிலையில், மகா சங்கத்தின் தேரர்கள் மற்றும் கத்தோலிக்கப் பேராயர் உள்ளிட்ட மதத்தலைவர்கள் இதில் தலையிட்டுத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன அவர்களுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கிறார்.
இது குறித்து ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தனவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தகனம் செய்வது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை, தற்போது நாட்டுமக்களின் உரிமை சார்ந்த பிரச்சினை என்ற நிலையையும் கடந்த தேசிய மற்றும் சர்வதேச ரீதியான பிரச்சினையாக மாறியிருக்கிறது.
$ads={2}
இவ்வாறானதொரு உணர்வுபூர்வமான பிரச்சினையில் அனைத்துத் தரப்பினரதும் ஆலோசனையைப் பெற்றுத் தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியிருக்கிறது.
அதன் விளைவாக எமது நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் தேசிய மற்றும் சர்வதேச சக்திகள், இந்த சர்ச்சையைப் பயன்படுத்தி பல்லின சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அவ்வாறான முயற்சிகளைத் தோற்கடிப்பதற்கும் இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையை உறுதிசெய்வதற்கும் அரசாங்கம் உடனடியாகத் தலையீடு செய்து, இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும்.
அதேபோன்று இவ்விடயத்தில் மதத்தலைவர்களின் அபிப்பிராயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், ஏனைய அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களைக் கேட்டறிய முற்பட வேண்டும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இந்தப் பிரச்சினை காரணமாக சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பநிலை தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு மற்றும் இதற்குத் தீர்வு காண்பதற்கான ஆலோசனைகள் உள்ளடங்கிய விசேட கடிதமொன்று பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தனவினால் மகாசங்கத்தினரின் தேரர்கள் மற்றும் கத்தோலிக்கப் பேராயர் உள்ளிட்ட மதத்தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது விடயத்தில் அவர்கள் தலையிட்டுத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-நா.தனுஜா