வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சக்திமிக்க தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட கடற் கொந்தளிப்பினால் காரைதீவுக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் பள்ளிவாசல் மையவாடி (மயானம்) மீண்டும் கடலுக்குள் காவுகொள்ளப்பட்டுவருகிறது.
மையவாடியின் கிழக்குப்பக்க மதில் சீற்றமிகு கடலலலையால் அடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. மையவாடியின் கிழக்கு பக்கம் படிப்படியாக கடலுக்குள் உள்வாங்கப்பட்டுவருகிறது. அதனால் அங்குள்ள ஜனாசாக்கள் (பிரேதம்) கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றன. மக்கள் உணர்ச்சி வசப்பட்டவர்களாக பிரேதங்களை வேறிடத்தில் அடக்கவும் சிந்திக்கின்றனர். காலையில் பொதுமக்கள் அங்கு ஒன்றுகூடினர்.
இச்சம்பவம் இன்று (02) அதிகாலை முதல் இடம்பெற்றுவருகிறது.
கடந்த ஒரு மாதகாலத்திற்கு முன்னரும் கடலரிப்பு காரணமாக இதே மையவாடியின் ஒருபக்க மதில் இடிந்து வீழ்ந்தது. காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் தவிசாளர் கி.ஜெயசிறில் உபதவிசாளர் உறுப்பினர்கள் ஆகியோர் அங்குவிரைந்து பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினர். அவர்களுடன் பேசியபின்னர் மாளிகைக்காடு அந்நூர் பள்ளிவாசல் நிருவாகத்தினரின் முயற்சியினால் மீண்டும் மதில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கென பாறாங்கற்கள் கொண்டுகுவிக்கப்பட்டிருந்த இந்நிலையில் மீதி மதிலும் நேற்றைய கடல்சீற்றத்தினால் அடித்து தரைமாக்கப்பட்டுள்ளது.
மையவாடி கடலுக்குள் உள்வாங்கப்படும் சம்பவத்தை கேள்வியுற்ற காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் கடரோலரப்பாதுகாப்பு அலுவலர் எ.எம்.மகுறூப் உள்ளிட்டோர் விரைந்து பார்வையிட்டனர்.
அந்நூர் பள்ளிவாசல் பிரமுகர் எ.எம்.பைசர் நிலைமையை தவிசாளரிடமும் அதிகாரிகளிடமும் கூறினார். கல்வேலி அமைப்பது பற்றியும் இழுத்துச் செல்லப்படும் எஞ்சிய பிரேதங்களை ஒரு பாரிய குழியை வெட்டி அடக்கம் செய்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அம்பாறைமாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவுடன் தொடர்புகொண்ட பிரதேசசெயலர் நிலைமையை விளக்கினார். அவசியமான நடவடிக்கையை எடுக்குமாறு கூறிய அரசஅதிபர் தானும் வருவதாகக் குறிப்பிட்டார்.
$ads={2}
தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவிக்கையில் மையவாடி பாதுகாப்பு விடயத்தில் இங்குள்ள மக்கள் ஒற்றுமைப்பட்டு முடிவுஎடுக்கவேண்டும். பிரிந்துநின்றால் எங்களால் எதுவும் செய்யமுடியாது போய்விடும். எனவே நீங்கள் இதற்கென ஒரு குழுவை அமைத்து செயற்படுங்கள் என்று ஆலோசனை கூறினார்.
-காரைதீவு நிருபர் சகா