கொரோனா தொற்று அச்சத்தில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான நித்தியானந்தன் பாசமலர் (35) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் (05) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவரது குடும்பத்தினர் அண்மையில் அனுராதபுரம் பகுதிக்கு திருமண நிகழ்வொன்றில் அவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் வெல்லாவெளி திரும்பியதும், குடும்பத்தினர் அனைவரும் 14 நாட்கள் பொதுச்சுகாதார பரிசோதகரால் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி விடுவோமோ என்ற அச்சம் குறிப்பிட்ட பெண்ணுக்கு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 28ஆம் திகதி வீட்டின் அறையில் நுழைந்து மண்ணெண்ணெயை தனக்கு ஊற்றி தீ மூட்டிக்கொண்டார்.
இதை அவதானித்த கணவர், உடனடியாக அவரை மீட்டு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்கைளப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 4ஆம் திகதி உயிரிழந்தார்.