ஜப்பான் சிறுமியை காதலித்து அவரை பெற்றோருக்குத் தெரியாமல் இலங்கைக்கு அழைத்து வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதம நீதவான் ரி.என்.எல்.மஹவத்த நேற்று (04) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும், 5 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீர பிணைகளின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொச்சிகடை – தலுவாகொட்டுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர் இல்லத்தில் மாதத்திற்கு இரு தினங்கள் குறித்த சிறுமியை சந்திப்பதற்கான சந்தர்ப்பமும் நீதிமன்றால் இளைஞனுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அரச மொழி பெயர்ப்பாளரின் உதவி ஊடாக, குறித்த சிறுமியிடம் மீண்டும் வாக்குமூலத்தை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என கொச்சிக்கடை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
52 வயதான தனது தாயிற்கும், 26 வயதான கட்டான பகுதியைச் சேர்ந்த இலங்கை பிரஜைக்கு இடையிலான தொடர்பு காரணமாக, 2019ஆம் ஆண்டு தாம் இலங்கை வந்த போது எதிர்கொண்ட பிரச்சினை தொடர்பில் சரியான மொழி பெயர்ப்பு கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால் குறித்த சிறுமியினால் வெளியிடப்பட்ட அந்த சம்பவம் தொடர்பிலும் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
$ads={2}
அத்துடன், ஜப்பான் சட்டத்தின் பிரகாரம், 16 வயது நிரம்பிய ஒருவர் திருமண பந்தத்தில் இணைந்துக்கொள்ள முடியும் என ஜப்பான் சிறுமியின் தாய் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அதனால், தனது மகளை குறித்த இளைஞனுக்கு திருமணம் செய்துக்கொடுக்க சிறுமியின் தாய் விருப்பம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி நீதிமன்றில் கூறியுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதிக்கு இந்த வழக்கு மீதான விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.