கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்று பரவல் எதிர்வரும் காலங்களில் குறைவடையலாம் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தற்போது வைரஸ் பரவுவதில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
"நாங்கள் நேர் திசையை நோக்கி செல்கிறோம், இந்நிலையில் கொரோனா வைரஸின் பரவலில் குறிப்பிடத்தக்க குறைப்பைக் காணலாம். புதிய தொற்றாளர்களை கண்டறிய விரைவான ஆன்டிஜென் டெஸ்ட் கருவிகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் கொழும்புக்குள் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான குறைவு காணப்படுவதாகவும், தற்போது கண்டறியப்பட்ட புதிய தொற்றாளர்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றனர்.
ஒக்டோபரில் பரவல் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டதை ஒப்பிடும்போது, கொழும்பிலிருந்து புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகளின் வைரஸ் செறிவு குறைவாக இருப்பதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு திட்டமிட்டபடி தொடர்ந்தால், கொரோனா வைரஸின் பரவலை மேலும் குறைத்து, கொழும்பு நகராட்சி மன்ற நகர எல்லைக்குள் வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும்” என அவர் கூறியுள்ளார்.