ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசியை இந்த வாரம் பயன்படுத்துவதற்கு பிரிட்டன் தயாராகி வருகிறது. ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு கடந்த வாரம் பிரிட்டன் அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடு என்ற பெயரையும் பிரிட்டன் பெற்றது. இந் நிலையில் அதன் முதல் டோஸ் செவ்வாய்க்கிழமை பயன்படுத்தப்படவுள்ளது.
$ads={2}
80 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு இல்ல ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தேசிய சுகாதார சேவை அதிக முன்னுரிமை அளித்துள்ளது. ஒட்டு மொத்தமாக பிரிட்டன் 40 மில்லியன் டோஸ்களை ஆர்டர் செய்துள்ளது. இது சுமார் 67 மில்லியன் மக்கள் சனத் தொகை கொண்ட நாட்டு மக்களில் 20 மில்லின் பேருக்கு போடப் போதுமானதாகும். முதல் வாரத்திற்குள் சுமார் 800,000 அளவுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கிடைக்கப் பெறும் தடுப்பூசிகளை சேமித்து வைக்க நாடு முழுவதும் பாதுகாப்பான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு அவரை சரிபார்க்கப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசி கடுமையான சேமிப்பு தேவைகளைக் கொண்டுள்ளது. இது -70 சி (-94F) இல் வைக்கப்பட வேண்டும், மேலும் வழக்கமான குளிர்சாதன பெட்டியில் ஐந்து நாட்கள் மட்டுமே நீடிக்கும். அந்த காரணத்திற்காக, இந்த தடுப்பூசி முதலில் 50 வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இதேவேளை கொவிட்-19 நோய்க்கு தங்கள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் V தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த ரஷ்யா, அதை உற்பத்தி செய்து தற்போது பொதுமக்களுக்கான பயன்பாட்டையும் தொடக்கிவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.