மைத்திரி மற்றும் ரணில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள்! ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக் குழு முன்னிலையில் தயாசிறி தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மைத்திரி மற்றும் ரணில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள்! ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக் குழு முன்னிலையில் தயாசிறி தெரிவிப்பு!


வெளிநாட்டு சக்திகளின் பின்னணியிலேயே கடந்த 2015 முதல் நாட்டில் ஜனாதிபதிகள், அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று (08) முதன்முறையாக சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வேறு ஒரு ஜனாதிபதியை நியமிக்க வேண்டிய தேவை யாருக்கு இருந்தது எனவும் இதனையும் இவ்வாணைக்குழு தேடிப்பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குள் நுழைந்த குண்டுதாரி அங்கு தாக்குதல் நடத்தாமை, அந்த ஹோட்டலில் விசேடமான சிலர் தங்கியிருந்ததன் எதிரொலி என தயாசிறி ஜயசேகர, தாக்குதலின் பின்னர் வெளிப்படுத்திய கருத்து தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்தவாறு, இராஜாங்க அமைச்சர் தயசிறி ஜயசேகர குறிப்பிடுகையில்,

$ads={2}

"அங்கு சிலர் தங்கியிருந்தனர் என்பதைவிட ஏன் அந்த ஹோட்டலில் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதையே நான் சிந்தித்தேன். குண்டுதாரி ஹோட்டலுக்குள் சென்று மீண்டும் திரும்பி வந்தார். இந்த ஹோட்டலுடன் ஒரு நாடும், அந்நாட்டின் வர்த்தகரும் தொடர்ப்புபட்டுள்ளமையை நீங்களும் அறிவீர்கள். அதனால் இது தொடர்பில் தேடிப் பார்க்குமாறு பொலிஸாருக்கு கூறினோம்.

திடீரென நாமல் குமார என ஒருவர் முளைக்கின்றார். அவர் ஆட்சியில் உள்ள ஜனாதிபதியையும், ஜனாதிபதியாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நபரையும் கொலை செய்ய திட்டமொன்று உள்ளதாக கூறுமளவுக்கு நாடு அராஜக நிலைக்கு சென்றது எப்படி என்பதை தேடிப் பார்க்க வேண்டும்.

ஸஹ்ரானின் பின்னணியில் இருந்துகொண்டு அவரை நெறிப்படுத்தியவர் யார்?, ஏதேனும் நோக்கத்துக்காக ஸஹ்ரான் யாரோ ஒரு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டுள்ளாரா என்பதை தேடிப் பார்க்க வேண்டும்.

நாட்டில் தேசிய உளவுப் பிரிவுகளை விட, இந்நாட்டில் தாக்குதல் இடம்பெறப்போவது, அதற்கான இடம், அது தொடர்பிலான நேரம் வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக இந்திய உளவுத்துறை இந்நாட்டில் எந்தளவு தூரம் செயற்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. எமக்கு தெரிந்தது இந்திய உளவுத்துறை மட்டும். இவ்வாறே எமக்கு தெரியாமால் எமது நாட்டில் எத்தனை வெளிநாட்டு உளவுச் சேவைகள் செயற்படுகின்றன. இவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள்.

இவ்வாறான நிலைமை எதிர்காலத்திலும் தொடருமானால், குண்டு வெடிப்புக்கள் மூலம் எத்தனை அரசாங்கங்கள் கவிழ்க்கப்படும் என்பது தெரியாது. ஸஹ்ரான் மட்டுமல்ல, சில குறைபாடுகள் இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, முன்னாள் பிரதமர் ரணில், முனனாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஆகியோர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களாகவே நான் பார்க்கின்றேன். 

$ads={2}

அரசியல்வாதியாகவும், சட்டத்தரணியாகவும் நான் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் இங்கு குறிப்பிடுகிறேன்.

இந்தத் தாக்குதல் குறித்த விசாரணைகள் முறையாக இடம்பெறவில்லை என ரஞ்சித் கர்தினால் மெல்கம் ஆண்டகை கூறுவது கூட அத்தகைய நிலைமைகள் அவதானத்துக்கு உட்படாமையை சுட்டிக்கட்டுவதாக இருக்க முடியும்." என தெரிவித்தார்.

இதனைவிட 2015 ஆம் ஆண்டின் பின்னர் தானும் அமைச்சரவையில் அமைச்சராக இருந்ததாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தேசிய பாதுகாப்பு விடயத்தில் சில குறைபாடுகள் இருந்ததாக ஒப்புக்கொண்டார்.

"ஜெனீவா ஒப்பந்ததில் கைச்சாத்திட்டமைக்கு எதிராக அரசாங்கத்தில் இருந்து கொண்டே நாம் எதிர்த்தோம். ஜனாதிபதிக்கு அப்போது தேசிய பாதுகாப்பை பலப்படுத்த தேவை இருந்தது. எனினும் அரசாங்கத்தின் மறு தரப்பினருக்கு அந்த அவசியம் இருக்கவில்லை." என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக் டி சில்வாவின் கேள்விக்கு பதிலளித்து இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

-எம்.எப்.எம்.பஸீர்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.