மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தின் எஸ்.சி.ஐ.யூ. எனப்படும் விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி கட்டுகஸ்தோட்டை பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகரான குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி செலுத்திய கார், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவின் குருணாகல் – கண்டி பிரதான வீதியின் யட்டிவாவல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
$ads={2}
குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டப்ளியூ.எம்.எஸ். உச்சித்த சிறியின் மேற்பார்வையில், போக்குவரத்து பிரிவின் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ தலமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
-எம்.எப்.எம்.பஸீர்