முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை கம்பஹா உயர்நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர இன்று (02) விலக்கி கட்டளையிட்டார்.
தொம்பேவில் உள்ள மல்வான பகுதியில் ஒரு நிலம் வாங்கவும், அங்கே ஒரு பெரிய வீடு மற்றும் நீச்சல் குளம் கட்டவும் அரசு பணத்தை செலவிட்டதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் மீது கம்பஹா உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில் பசிலுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
$ads={2}
பசில் ராஜபக்ஷ பொருளாதார மீளெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் உத்தியோகபூர்வ கடமைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் தனது வாடிக்கையாளரின் பயணத் தடையை நீக்கக் கோரி பசில் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி டி.ஏ.பி வீரரத்ன இன்று (02) உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி செயலணி தலைவராக நியமிக்கப்பட்டு பிரசுரமான வர்த்தமானி அறிவிப்பின் நகலையும் டிஏபி வீரரத்ன சமர்ப்பித்தார்.
கம்பஹா உயர்நீதிமன்ற நீதிபதி நிமல் ரனவீர, பயணத்தடையை விலக்கி குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரிற்கு அறிவித்தல் வழங்கியது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் இன்று கம்பஹா உயர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டது.