ஈஸ்டர் தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து, வட மேல் மாகாணத்தில் இடம்பெற்ற முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைகளை கட்டுப்படுத்த, தமது முகாமிலிருந்த படையினரின் எண்ணிக்கை போதுமானதாக இருக்கவில்லை என வட மேல் மாகாணத்தின் 143 ஆவது இராணுவ படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரியந்த திஸாநாயக்க இன்று (07) தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னரான முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைகள் தொடர்பில் விசாரணை செய்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில், எனது பொறுப்பிலிருந்த படையணியில் 600 படை வீரர்களே இருந்தனர். 7,888 சதுர கிலோ மீற்றர்களுக்கு பாதுகாப்பளிக்க இந்த படையினரின் எண்ணிக்கை போதாது.
நாங்கள் மதஸ்தலங்களுக்கு பாதுகாப்பை வழங்கினோம். நாம் பொலிஸாரிடம் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கையும் முன்வைத்தோம். எமது படையணியின் இரு படைக் குழுக்களை பல பகுதிகளுக்கும் அனுப்பினோம். எனினும் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த அது போதுமானதாக இருக்கவில்லை.
இதன்போது சாட்சியை நெறிப்படுத்திய அரச சிரேஷ்ட சட்டவாதி, இந்த வன்முறைகளின் போது இராணுவம் எவரையேனும் கைது செய்ததா என வினவினார்.
அதற்கு பதிலளித்த பிரிகேடியர் திஸாநாயக்க, இராணுவம் எவரையேனும் கைது செய்திருந்தால் அதற்கான ஆவணங்கள் இருந்திருக்கும். எனினும் அவ்வாறு எவரையேனும் கைது செய்தமைக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. என பதிலளித்தார்.
$ads={2}
எங்களிடம் உள்ள ஆவணங்கள் பிரகாரம் இரும்புக் கம்பிகள், பொல்லுகள், கத்திகளுடன் காணப்பட்டவர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை பிங்கிரிய பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல இராணுவ வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என குறித்த பிரிகேடியர் சாட்சியமளித்தார்.
அத்துடன் 2019 மே 13ஆம் திகதி குளியாபிட்டி பொலிஸ் நிலையத்தை சூழ மக்கள் திரண்டிருந்ததாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு நிபந்தனை விதித்ததாகவும் சுட்டிக்காட்டிய பிரிகேடியர் திஸாநாயக்க, தான் அங்கு சென்றபோது, கைதானோரை விடுவிக்க பொலிஸ் மா அதிபர் பூஜித அறிவுறுத்தியதாக குளியாப்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
-எம்.எப்.எம்.பஸீர்