இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படும் விடயத்தில் பிரிட்டன் தலையிடவேண்டும் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்சல் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள இலங்கை முஸ்லீம் அமைப்புகளின் பேரவைக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் துணை தலைவர் என்ற அடிப்படையில் தான் இந்தகடிதத்தை எழுதுவதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மை மதத்தினரின் மதசுதந்திரத்தை மறுக்கின்றது. இந்த சிறுபான்மை மதத்தினரிற்கு உடல்களை தகனம் செய்வது தடை செய்யப்பட்ட விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
$ads={2}
உலகசுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்கள் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் தகனம் செய்யலாம் என தெரிவித்துள்ள போதிலும்,மனித உரிமை அமைப்புகளின் மன்றாட்டமாக வேண்டுகோள்கள் வெளியாகியுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவில்லை.
இறுதி நிகழ்வுகள்,குறிப்பாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது சுதந்திரத்தின் ஒரு பகுதி என்பதுடன் முக்கியமான பகுதி என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்சல் கான், முஸ்லீம்களிற்கு உடல்கள் அடக்கம் செய்யப்படுவது கட்டாயமானது என தெரிவித்துள்ளார்.
உடல்களை தகனம் செய்வது முஸ்லீம்களை பொறுத்தவரை தடை செய்யப்பட்டுள்ளதுடன் உடல்களை அவமதிப்பதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை சுதந்திரத்தினை பாதுகாப்பதற்காக மேலும் உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்படுவதை தடுப்பதற்காக அவசர இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறு பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கான கடிதத்தில் பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்சல் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.