![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV2oNOptlM7Q8JKr2d2MgCMc6i8COAMF_GOKci5xSSSQkyqUYGIckyTGJBuyl8gOHn_XNJZ7yWiXUKlDU0RLv-z2SK5vNvqa3mXt1AZSBXnMb92Z3EgFjwG-8BvRQnrLTn95-jUBeBRmA/s16000/EqT-GLhXcAUhk24-696x392.jpg)
கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரரருக்கு வழங்கப்படும் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதுக்கு இந்திய அணியின் கப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரருக்கான விருதும் விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் வீரருக்கான விருது அவுஸ்திரேலியாவின் ஸ்மித்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஜனவரி 1ஆம் திகதி முதல் 2020 டிசம்பர் 31ஆம் திகதிவரை கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களைத் தேர்வு செய்து விருது அளிக்க ஐசிசி தீர்மானித்தது. இதற்காக உலக அளவில் கிரிக்கெட் பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஐசிசி பொதுமேலாளர் உள்ளிட்டோர் அடங்கிய தேர்வுக்குழு விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களை ஆய்வு செய்தது. இதில் முதல் முறையாக ரசிகர்களின் கருத்துகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதற்கு 10 சதவீதம் மதிப்பெண் வழங்கப்பட்டது.
$ads={2}
அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணி, ஒருநாள் அணி, டெஸ்ட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் டி20, ஒருநாள் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கப்டன் தோனி தேர்வு செய்யப்பட்டார். டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கப்டனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர், ஒருநாள், டெஸ்ட், டி20 வீரர்களை ஐசிசி அறிவித்துள்ளது.
10 ஆண்டுகளில் சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர்
அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதுக்கு இந்திய அணியின் கப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகியவற்றில் சேர்த்து 20,396 ரன்கள் சேரத்துள்ளார். 66 சதங்கள், 94 அரை சதங்களை விராட் கோலி அடித்துள்ளார். 70 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக விராட் கோலியின் சராசரி 56.97 சதவீதம் இருக்கிறது. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியிலும் கோலி இடம் பெற்றுள்ளார் என்பதால், கோலிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளில் சிறந்த வீரர் பட்டியலில் சங்கக்காரவின் பெயரும் பிரேரிக்கப்பட்டிருந்தது.
ஸ்டீவ் ஸ்மித் சிறந்த டெஸ்ட் வீரர்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEYSQNIj9JZipp51tBv6nkKEqF5DTMQC4NRxb_cQvD_bUn6TTCcHxX6Bv7sbR-bWE8jOKGtYHiMaqCye9rf3xReIDwwdObgSmV0H9MUkkpGQG3nM4KARIDQRLaH7ibK4NjJFcBZDJRwII/s16000/EqUWy0CXEAAHXru-696x348.jpg)
கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் போட்டி வீரராக அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் 7,040 ரன்களை ஸ்மித் குவித்துள்ளார். 26 சதங்கள், 28 அரை சதங்களை ஸ்மித் அடித்துள்ளார். 65.79 ரன்களை டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக ஸ்மித் வைத்துள்ளார்.
ரஷித் கான் சிறந்த டி20 வீரர்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9yWs5mBZTMfEP6hlOX8-JV_2qMOel3Fg7uGkw-xzuwcfYZU_-xHevYF1KWoojjy8cpidJvodrtdf7h_XNqAd-Mk-UNCBhDrKgePW_R-nKdZlk075oX_tKDVQ8n0ZUohhIm9O8Cs3mKsw/s16000/EqT9VtPXEAAZapF-696x348.jpg)
கடந்த 10 ஆண்டுகளில் டி20 போட்டிக்கான சிறந்த வீரருக்கான விருது ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரஷித்கான், 12.62 சராசரி வைத்துள்ளார். 3 முறை 4 விக்கெட்டுகளையும், 2 முறை 5 விக்கெட்டுகளையும் டி20 போட்டிகளில் ரஷித் கான் வீழ்த்தியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டுக்கான சிறந்த வீரர்
கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருது இந்திய அணியின் கப்டன் விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விருதும் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை கோலி குவித்துள்ளார். இதில் 39 சதங்கள், 48 அரை சதங்களை கோலி அடித்துள்ளார். வீரராக களத்தில் இருந்து 112 கட்ச்சுகளை கோலி பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்ட சராசரியாக 61.89 கோலி வைத்துள்ளார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqPV-CBIyprX8OC-PLyiJ8Lq8tq7mV-bRpDICTyOSAF7PtjM1BMgM58zMW89syRY6rnU_yeMZnpSre6femnSBn-OWisgtYFxVZvk6tYQLOf9tq6xMzcXWfuKuIn_JhB-sUAtKTHvrFdjA/s16000/EqUAgUjXYAE2vrG-600x300.jpg)
$ads={2}
பெண்கள் பிரிவில் இந்தளவுதான, இன்னும் இருக்கிறதா பாணியில் மொத்த விருதுகளையும் அவுஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி பெற்றுள்ளார். ஐ.சி.சி பெண் கிரிக்கெட் வீரருக்கான ரேச்சல் ஹேஹோ பிளின்ட் விருதை வென்றார். ஒருநாள், டி 20 விருதுகளையும் வென்றுள்ளார்.
தோனிக்கு விருது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2M_PPDEW3OGfLgnk4IcxhEzcV1KVXixCxC7_YJ694yPb0HMDxGcDixgs8zp2a8TnKxubhMVnwG51B4cIaiW19OLnAakKrfFtDbpx7XWgbEHamez7C11t3WVI-bNxEQjdDy0rLXAofTeY/s16000/EqT_CNBW8AAccOt-600x300.jpg)
இந்திய அணியின் முன்னாள் கப்டன் தோனிக்கு ஐசிசியின் கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசி ஸ்பிரிட் ஒஃப் தி அவார்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியன்று நடந்த சம்பவத்துக்குதான் தோனிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் இயான் பெல் மற்றும் மோர்கன் களத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். இயான் பெல் சதத்தை கடந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் அடித்த பந்து பவுண்டரிக்கு செல்ல, பிரவின் குமார் அதனை ஓடிச் சென்று தடுத்தார். அந்த பந்து பவுண்டரி எல்லைக் கோட்டை தொட்டுவிட்டது போலவே எல்லோருக்கும் தெரிந்தது. பந்தினை மிகவும் ஆசுவாசமாக வந்து தூக்கி ஸ்டம்ப் அருகே வீசினார் பிரவின் குமார்.
பவுண்டரி சென்றுவிட்டது என நினைத்து இயான் பெல்லும் கிரீஸை விட்டு வெளியே மெதுவாக நடந்து சென்றார். ஆனால், பந்தை வாங்கி இந்திய வீரர் ரன் அவுட் செய்தார். மூன்றாவது நடுவர் முறையீட்டில் அது அவுட் கொடுக்கப்பட்டது. இயான் பெல்லும் பெவிலியன் திரும்பிவிட்டார்.
தேநீர் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாட வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக இயான் பெல்லும் விளையாட வந்தார். தோனி ரன் அவுட் விக்கெட் கேட்டதற்கான முறையீட்டை வாபஸ் பெற்று இயான் பெல்லை மீண்டும் விளையாட அழைத்து வந்தார். . அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் தோனியின் இந்தச் செயல் அனைத்துத் தரப்பு கிரிக்கெட் ரசிகர்களாலும், முன்னாள் வீரர்களாலும் பாராட்டப்பட்டது. இந்தச் சம்பவத்துக்காக தோனிக்கு ஐசிசி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் - தமிழ் பக்கம்