நாளைய தினம் (30) தொடக்கம் அரச பேருந்துகளை வழமைப் போல நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடனும் இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தூரப் பிரதேசங்களுக்கான பேருந்து சேவை கடந்த காலங்களில் பாரிய அளவில் குறைக்கப்பட்டிருந்தது. எனினும் இதனை வழமைக்கு கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது.
பேருந்துகளில் பயணம் செய்ய மக்கள் அச்சம் கொண்டிருந்த நிலையில், அந்த அச்சத்தை போக்கும் வகையில் பேருந்து சேவைகளை உரிய வகையில் நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடமைகளுக்கு செல்கின்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில், போதிய அளவான பேருந்து சேவைகளை நடத்துமாறு விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சுர் திலும் அமுனுகம உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதற்கிடையில் தற்போது மேல் மாகாணத்தை தவிர, ஏனைய பகுதிகளில் தனியார் பேருந்து சேவைகளை உரிய வகையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை அலுவலக தொடருந்து சேவைகள் உட்பட கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு வருகின்ற மற்றும் அங்கிருந்து புறப்படுகின்ற 104 ரயில் சேவைகள் நாளை இயக்கப்படவுள்ளது என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
$ads={2}
தனிமைப்படுத்தல் நிலைமையில் இருந்து விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் நாளையதினம் முதல் ரயில்கள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.