நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையை பயன்படுத்தி பாரியளவிலான ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் இலங்கை முதலீட்டு சபையினால் சகல தொழிற்சாலைகளுக்கும் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களில் வாரத்திற்கு 5 வீதமானவர்களுக்கு PCR பரிசோதனைகளை நடத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக நான்கு தனியார் வைத்தியசாலைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் 10 இலட்சம் வரையான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவ்வாறாயின் வாரத்திற்கு 50 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் அந்தளவுக்கு பரிசோதனைகளை செய்வதற்கான உபகரணங்கள் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. அதேபோன்று இந்த விடயத்தில் அரசாங்கம் ஒத்துழைக்காது தனியார் வைத்தியசாலைகளுக்கு அதனை வழங்கியிருக்கின்றது.
அதன்பிரகாரம் ஒரு பரிசோதனைக்கு 6,500 ரூபா என்ற அடிப்படையில் பார்த்தால் வாரத்திற்கு 325 மில்லியன் ரூபாவை செலவழிக்க வேண்டியுள்ளது.
இதற்கான உபகரண தொகுதிகளை கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இது அதிக இலாபத்தை சம்பாதிக்கும் ஒன்றாகவும் அமையலாம் என்றும் கூறினார்.