சுனாமியில் காணாமல் போன மகன் 16 வருடங்களின் பின்னர் திரும்பி வந்த மாளிகைக்காட்டில் அண்மையில் நடைபெற்ற சம்பவத்தில் திடீர் திருப்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுனாமியில் காணாமல் போன மகனை அம்பாறை பிரதேசத்தில் வளர்த்தக்காக கூறப்படும் தாயை ஊடகவியலாளர்கள் சந்தித்த போது விடயம் மிகப்பெரும் குழப்பத்தை தோற்றுவித்துள்ளது.
மகன் வீட்டுக்கு திரும்பி விட்டதாக மாளிகைக்காட்டு பிரதேசத்தை சேர்ந்த அபுசாலி சித்தி கமாலியா எனும் தாய் சொன்னதைஅடுத்து, ஊடகவியலாளர்கள் வீடு திரும்பிய மகனையும் தாயையும் செவ்வி கண்டனர். அப்போதெல்லாம் தனது மகன் வீடு திரும்பி விட்டதாக கூறி ஊடகங்கள் முன்னிலையிலையே மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் மாளிகைக்காட்டு பிரதேசத்தை சேர்ந்த அபுசாலி சித்தி கமாலியா. ஆனால் ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது வீடு திரும்பிய தன் மகனுக்கு தமிழ் பேசுவதில் சிக்கல் இருப்பதாக கூறிய மகனை ஊடகங்கள் முன்னிலையில் முழுமையாக வாய்திறக்க விடாமல் தடுத்தும் வந்தார்.
ஆனால் இப்போது உண்மைகள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஊடகங்களின் செய்திகளில் பிரதான பாத்திரமேற்றிருந்த குறித்த சம்பவம் சிங்கள ஊடகங்களில் பேசப்பட்ட பின்னர் பிரச்சினையை அறிந்து கொண்ட வளர்ப்பு தாயாக அடையாளப்படுத்தப்பட்ட அம்பாறை பிரதேச தாய் தன்னுடைய மகன் ஏமாற்றப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸில் கடந்த புதன்கிழமை (30) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களிலும் பலரிடமும் விசாரணை செய்த போது பல விடயங்கள் தெரியவருகிறது. அதனடிப்படையில் பல வருடங்களாக பிள்ளையை இழந்து தவித்துக்கொண்டிருந்த மாளிகைக்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த கல்முனையிலுள்ள அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஊழியராகப் பணியாற்றும் அபுசாலி சித்தி கமாலியா, ஒரு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் மூலம் காணாமல் போன தன்னுடைய மகன் முகம்மட் அக்ரம் றிஸ்கான் அம்பாறை பிரதேச மலாய் முஸ்லிங்களின் வீட்டில் வளர்வதாக அறிந்துகொள்கிறார்.
பின்னர் மகன் வளர்வதாக கூறப்பட்ட அம்பாறை பிரதேச வீட்டிற்கு சென்று சில வருடங்களாக அவர்களிடம் வளர்வது தன்னுடைய மகன் என்பதாக வாதாடி வந்துள்ளார். அங்கு பல மாறுபட்ட வித்தியாசமான வேடங்களிலும் சென்ற அபுசாலி சித்தி கமாலியா அந்த குடும்பத்தின் சார்பிலான எல்லோரிடமும் வாதாடி வந்தேன் என்கிறார்.
அபுசாலி சித்தி கமாலியாவுக்கு ஒரேயொரு பிள்ளைதான். அதுவும் சுனாமியில் காணாமல் போய்விட்டதால் பெரும் கவலையடைந்தார். கணவரும் அபுசாலி சித்தி கமாலியாவுடன் இல்லை. மகன் பிறந்து நாலாவது மாதம் கணவர் பிரிந்து சென்று வேற்றுமத பெண்மணியை வேறுமணம் செய்துகொண்டார். தன்னந்தனியே போராடி வந்தேன் என்று தனது துயரத்தை அவர் ஊடகங்களின் முன்னிலையில் கவலையுடன் மகன் திரும்பிவந்த அன்றே பகிர்ந்து கொண்டார்.
சுனாமியில் காணாமல் போன மகனின் சிறிய வயது புகைப்படத்தை அன்று காட்டியது போலவே இன்றும் காண்பிக்கிறார் அபுசாலி சித்தி கமாலியா. வந்திருப்பது தன்னுடைய மகன் தான் என அவர் நிரூபிக்க வைத்திருக்கும் ஆதாரத்தில் அதுவும் ஒன்று. அது தவிர பிறப்பு சான்றிதழும் வைத்துள்ளார். அவ்வளவுதான் அவர் வைத்திருக்கும் ஆதாரம்.
$ads={2}
திரும்பி வந்ததாக கூறப்படும் மகனுடனும் பேசினோம். சரளமாக சிங்களத்தில் பேசும் அவர் தமிழில் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அவர் இதுவரை வாழ்ந்து வந்த இடம் பற்றிய தகவலையும் வீட்டு முகவரியினையும் அவரிடமிருந்து கடுமையாக துருவித்துலாவி பெற்றுக் கொண்டோம். ஆனால் அந்த தாயின் தொலைபேசி இலக்கத்தை வழங்க கோரியபோது தனக்கு தெரியாது என மறுத்துவிட்டார்.
தனது மகனின் பெயர் முகம்மட் அக்ரம் றிஸ்கான் என்று கமாலியா கூறிய போதும், அந்தப் பையனோ தன்னை அம்பாறை பிரதேச வீட்டில் அழைக்கும் தனது பெயர் முகம்மட் சியான் என்கிறார்.
அம்பாறை பிரதேச தாய் நூறுல் இன்ஷானிடம் கேட்ட போது "கமாலியா எனும் பெண் எனது மகனைத் தேடி இங்கு அடிக்கடி வந்துள்ளார். அந்த காலகட்டத்தில் நான் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றிருந்தேன். அந்தப் பெண்ணிடம் எனது தாயார் (சியானின் பாட்டி), "சியான் எங்கள் பிள்ளை" என்று கூறியிருக்கிறார். ஆனால், அவர் அதனைக் கருத்தில் எடுக்காமல் அடிக்கடி வந்து தொந்தரவு செய்திருக்கிறார்" என்றார். மேலும்
தனது மகன் சியான் அம்பாறையிலுள்ள சத்தாதிஸ்ஸ எனும் பாடசாலையில் முதலாம் வகுப்பில் மூன்று மாதங்கள் வரை கல்வி கற்றார். அதன் பின்னர் என்னை (சியானின் தாயை) ஹம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் திருமணம் செய்து ஹம்பாந்தோட்ட பிரதேசத்திற்கு அழைத்துச் சென்றார். அதனால் முதலாம் வகுப்பிலிருந்து 05ஆம் வகுப்பு வரை ஹம்பாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில் சியான் கல்வி கற்றார்.
பின்னர், நான் (சியானின் தாய்) மீண்டும் அம்பாறை வந்ததையடுத்து 05ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை மீண்டும் அம்பாறையிலுள்ள பாடசாலைக்கு சியான் சென்றார். அதன் பிறகு அவர் படிப்பை தொடரவில்லை என்கிறார்.
இவைகளெல்லாம் இப்படி இருக்க கொழும்புக்கு வேலை தேடிச்சென்று அவ் இளைஞர் வேலை செய்து கொண்டிருந்த போது சம்பவ தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை வைத்து அந்த மகனுடன் அபுசாலி சித்தி கமாலியா பேசியுள்ளார்.
குறித்த நபர் கமாலியாவுக்கும் அவரது மகனுக்கும் உதவும் நோக்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கடந்த கால பிரத்தியோக செயலாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அந்த மகனுக்கு தொழில் வாய்ப்பொன்றை பெற்றுத்தர உள்ளதாகவும் அதற்காக கல்முனைக்கு வருமாறும் அழைத்து கல்முனைக்கு வரும் சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து கல்முனைக்கு வந்த அந்த இளைஞரை தன்னுடைய காரிலேயே தன் வீட்டிற்கும் அழைத்து வந்துள்ளார்.
16 வருடங்களின் பின்னர் வீடு திரும்பிய செய்தியை கேள்வியுற்ற இளைஞரை காண ஊடகங்கள் வந்து சேர்ந்தது. ஊடகங்களின் வாயிலாக தகவலறிந்த அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் உள்ள மக்கள் ஆவலுடன் அந்த இளைஞரை காண வந்தனர். தகவல் காட்டுத்தீயாக பரவியது. சிங்கள மொழி ஊடகங்கள் செய்தியை ஒளிபரப்பியதும் செய்தி வளர்ப்பு தாயாக அடையாளப்படுத்தப்பட்ட அம்பாறை பிரதேச தாய் நூறுல் இன்ஷானை சென்றடைகிறது. அதுமாத்திரமில்லாது செய்தியறிய சென்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளின் பின்னரே அந்த தாய் தன்னுடைய மகன் கொழும்பில் வேலையில் இல்லை. மாளிகைக்காட்டில் இருப்பதை அறிகிறார்.
பிரச்சினையை அறிந்து கொண்ட வளர்ப்பு தாயாக அடையாளப்படுத்தப்பட்ட அம்பாறை பிரதேச தாய் நூறுல் இன்ஷான் தன்னுடைய மகனுக்காக சம்மாந்துறை பொலிஸில் கடந்த புதன்கிழமை (30) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். அம்முறைப்பாட்டுக்கான விசாரணை வியாழக்கிழமை (01) நடைபெற்றது. விசாரணையில் இரு தரப்பினரிடமும் விசாரணை செய்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்டனர். இருதரப்பினரும் அந்த மகன் தனக்கு சொந்தமான பிள்ளை என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து தமது பக்க நியாயங்களை முன்வைத்தனர். தீர விசாரித்த சம்மாந்துறை பொலிஸார் இவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தில் வழக்கொன்றை பதிவுசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய முடிகிறது.
வளர்ப்பு தாயாக அடையாளப்படுத்தப்பட்ட அம்பாறை பிரதேச தாய் நூறுல் இன்ஷானை பற்றியும் மகனை பற்றியும் அறிந்துகொள்ள சென்ற போது அந்த மகன் அம்பாறை பிரதேச தாய் நூறுல் இன்ஷானின் மகன் என்பதையும் அவர் 2001 ஏப்ரல் 19 ஆம் திகதி பிறந்த அமீர் சிஹான் எனும் பெயரை உடையவர் என்பதாகவும் குடும்பத்தினர் பலரும் சாட்சி பகிர்கின்றனர். அவர் அங்கையே பிறந்து வளர்ந்தமைக்கான ஆதாரங்கள், அவர் அம்பாறை பிரதேச தாயின் மகன் என்பதற்கான ஆதாரங்கள் பலதையும் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
அவர் என்னுடைய மகன் அமீர் சிஹான் என்பதற்கான சகல ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக அம்பாறை தாய் கூறுகிறார். இல்லை சுனாமியில் காணாமல் போன என்னுடைய மகன் முகம்மட் அக்ரம் றிஸ்கான் என்கிறார் மாளிகைக்காடு தாய் சித்தி கமாலியா இப்போது நீதிமன்றமே யாருடைய பிள்ளை என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றாகி விட்டது பிரச்சினை.
தான் வேலை வாங்கி தருவதாக கூறியதும் அதற்காகவே தான் நான் மாளிகைக்காடு பிரதேசத்திற்கு சென்றதாகவும் அங்கு சென்ற என்னை தன்னுடைய மகனாக மாளிகைக்காடு பெண்மணி ஊடகங்களுக்கு அடையாளப்படுத்தியதாகவும் தனது மகன் கூறியதாக அம்பாறை பிரதேச தாய் நூருல் இன்ஷான் கூறுகிறார்.
இப்படி இருக்க அந்த இளைஞர் புதன்கிழமையே அம்பாறை பிரதேச வீட்டிற்கு சென்றடைந்துள்ளார் ஆனால் மாளிகைக்காட்டு பிரதேச தாய் தன்னுடைய மகன் கொழும்பில் அவர் வேலை செய்த சம்பளத்தை வாங்க சென்றுள்ளதாக அயலவர்களுக்கு கூறிவருகிறார்.
கமாலியின் மகனின் வருகை தொடர்பில் மாளிகைக்காடு கிழக்கு கிராம நிலதாரி ஏ.எம். அலியாரை தொடர்பு கொண்டு கேட்ட போது அபுசாலி சித்தி கமாலியா தனக்கு வாய் மொழிமூலம் தன்னுடைய மகன் கிடைத்துள்ளதாக அறிவித்ததாகவும் எழுத்து மூலம் நான் அறிவிக்க கேட்டிருந்தும் இதுவரை அவர் ஆவண ரீதியாக எதுவும் கையளிக்கவில்லை என்றார். தொடர்ந்தும் உங்களால் அது அபுசாலி சித்தி கமாலியாவின் மகன் என்பதை நிரூபிக்கக்கூடியதாக உள்ளதா என்ற கேள்விக்கு தன்னால் முடியாமல் உள்ளதாகவும் பரபணு சோதனை மூலமே அறிய கூடியதாக இருக்கும் என்றார்.
ஆனால் இங்கு சித்தி கமாலியாவின் மகன் முகம்மட் அக்ரம் றிஸ்கான் உண்மையிலேயே சுனாமியில் காணாமல் போனதை சகலரும் அறிவர். அவரது இழப்பினால் அந்த தாய் பட்ட இன்னல்களை கண்களால் கண்டவர்கள் மகன் கிடைத்த செய்தியை சந்தோசமாக ஏற்றுக்கொண்டனர். உறவினரும் அயலவருமான நான் உட்பட. இருந்தாலும் இந்த மகன் கிடைத்த செய்தி தொடர்கதையாகி நீண்டுகொண்டே சென்று விடாமல் அவசரமாக ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதுடன் எந்த தரப்பும் அநியாயத்தை சந்தித்துவிட கூடாது என்பதே எல்லோரது பிராத்தனையும்.
$ads={2}