மினுவாங்கொடை Brandix ஆடை தொழிற்சாலை கொரோனா கொத்தணியின் வலையமைப்புக்கு உட்பட்ட தகவலின்றி இருந்த 400 பேர் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சுகாதார தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணிபுரியும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அங்கு தங்கியிருந்து குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களில் எந்த தகவல்களும் இன்றி இருந்த 275 பேர் பொலிஸாரின் விசேட அறிவிப்பின் பிரகாரம் உரிய இடங்களுக்கு வருகை தந்தனர் என்று பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்நிலையில், அவ்வாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட 14 விசேட இடங்களுக்கு வருகை தந்து தம்மைப் பதிவு செய்து தனிமைப்படுத்தலில் ஈடுபட மறைந்திருந்த Brandix நிறுவன ஊழியர்களுக்கு இறுதி அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இதன்போது 125 பேர் தமது தகவல்களை வெளிப்படுத்தி தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும் Brandix கொரோனா கொத்தணி வலயத்துடன் நேரடியாகத் தொடர்புபட்ட மேலும் பலர் தலைமறைவாகியுள்ளமையால், பொலிஸ் சுகாதாரத்துறை சேகரித்துள்ள தகவல்களின் பிரகாரம் அவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட புலனாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.