சுங்க வரி செலுத்தப்படாமல் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானம் என சந்தேகிக்கப்பட்ட அடையாளம் காணப்படாத திரவம் மற்றும் குடிநீர் போத்தல்கள் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
2018 இல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு 2019 நவம்பரில் பங்களாதேஷிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாகக் கூறப்படும் 40 அடி கொள்கலன்கயே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு சுங்க வரி செலுத்தப்படாமல் இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. எனினும் இதனை இறக்குமதி செய்த தனியார் நிறுவனம் 2019 நவம்பரில் இவற்றை மீள் ஏற்றுமதி செய்வதாக கூறிய போதிலும் நீண்ட காலமாக அதனைச் செய்யாமல் காலம் தாழ்த்தியுள்ளனர். அதனடிப்படையில் சுங்க திணைக்கள அதிகாரிகளின் நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
தற்போதைய சுங்க திணைக்கள பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவியுடன் சந்தேகநபர்கள் அனைவரும் நேற்று புதன்கிழமை சுங்க திணைக்களத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதில் 11,257 லீற்றர் வெளிநாட்டு மதுபானம் இருப்பதாகக் கூறப்பட்ட போதிலும், கொள்கலன்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அவை மதுபானம் அல்ல என்பது கண்டறியப்பட்டதோடு, ஒரு லீற்றர் கொள்ளளவு கொண்ட தலா 15 போத்தல்கள் அடங்கிய 1179 பெட்டிகளே கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு அடையாளம் காணப்படாத 200 லீற்றர் கொள்ளளவு திரவமும் இதன் போது மீட்க்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாக கூறப்பட்ட இவை சுங்க வரி செலுத்தப்படாமல் உள்நாட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதோடு, இதனால் அரசாங்கத்திற்கு 40 மில்லியன் ரூபா வரி வருமானம் அற்றுப் போயுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்களம் முன்னெடுத்து வருகிறது என்றார்.